இன அழிப்பை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு அறிவாயுதம் கருத்தரங்கம்!

இலங்கை அரசு, கடந்த மே 2016-இல் புதிய அரசியல் யாப்பு அவையை அமைத்தது. வழிகாட்டுக் குழு மற்றும் துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த நவம்பர் 2016-இல் துணைக் குழுக்கள் தங்கள் அறிக்கையினை வெளியிட்டன. இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று வழிகாட்டுக் குழு தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கை இலங்கையின் அரசியல் யாப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை முன் மொழிந்துள்ளது.

பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலைப் பெற்ற 1948-ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தொல் தமிழர்கள் மீதும் இந்திய வம்சா வழி தமிழர்கள் மீதும் சிங்களர்கள் தலைமையேற்ற இலங்கை அரசு சட்டரீதியான ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சிங்களம் மட்டுமே சட்டம், தரப்படுத்துதல் சட்டம் என பல சட்டங்கள் தமிழர்களின் மொழி, கல்வி, நில உரிமை என ஒவ்வொன்றாக பறித்தன. அதை எதிர்த்து தமிழ்த் தலைவர்கள் நடத்திய அற வழியிலானப் போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் காவல் துறையாலும் சிங்களரை மட்டுமே கொண்ட இராணுவத்தாலும் வன்முறையான முறையில் கடுமையாக ஒடுக்கப்பட்டன. சிங்கள அரசின் இந்த வன்முறைக்கு எதிராகவே, தமிழ் இளைஞர்கள் தங்கள் மக்களைக் காக்கவும் தங்கள் உரிமைகளை காக்கவும் ஆயுதம் ஏந்தினர்.

ஆக இலங்கையில் நிலவி வரும் 70 ஆண்டு கால இனச் சிக்கலுக்கு அடிப்படைக் காரணமாக, தொடக்கப்புள்ளியாக இருந்தது, தமிழர்கள் மீதான சட்டரீதியான ஒடுக்குமுறையேயாகும்.
இந்தப் பின்னணியிலேயே இன்று இலங்கை அரசின் புதிய அரசியல் யாப்பு அவையையும் அதன் பரிந்துரைகளையும் பார்க்க வேண்டியுள்ளது.

அவ்வாறு நோக்கினால் இந்த புதிய பரிந்துரைகள் ஏற்கெனவே தமிழர்களுக்கு சட்ட ரீதியாக மறுக்கப்படட எந்த உரிமைகளையும் திருப்பி அளிப்பதாக இல்லை என்பதோடு மேலும் புதிய வடிவங்களில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை திணிப்பதாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்த புதிய அரசியல் யாப்பின் முன்னுரையிலேயே இலங்கை ‘ஒருமித்த, பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத தேசம்’ என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், இலங்கையை ஒரு பவுத்த நாடாக திட்டவட்டமாக அறிவிப்பதும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நிலையை சட்ட ரீதியாக வலுப்படுத்தும் விதத்திலேயே உள்ளது. மேலும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரம் கொடுத்திருப்பதும்.

தமிழர்களின் தொல் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக நிபந்தனை இன்றி இணைக்க மறுப்பதும்என தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரான பட்டியலாகவே இந்தப் புதிய பரிந்துரைகள் நீளுகின்றன.

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கான நீதி விசாரணைக் கோரிக்கை வலுப்பெற்று வரும் சூழலில் அதை தள்ளிப் போடும் முகமாகவே இந்த புதிய அரசியல் யாப்பு எனும் நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றியுள்ளது. ஆனால் இந்த நாடகத்தின் முடிவில் இலங்கையின் உண்மையான கோர முகம் வெளிப்பட்டுவிட்டது.
நடந்து முடிந்த இனப்படுகொலையை மட்டுமல்ல இன்று வரைத் தொடரும் இனப்படுகொலையையும் இனியும் தான் நடத்தப் போகும் இனப்படுகொலையையும் சட்ட ரீதியாக காத்துக் கொள்ளும் வகையிலேயே இந்தப் புதிய அரசியல் யாப்பின் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை நன்கு புரிந்து கொண்ட உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தப் புதிய அரசியல் யாப்பை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். அவர்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து நிற்கிறார்கள் என்பதை இக்கூட்டத்தின் மூலம் உறுதி செய்கிறோம்.ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பது அய். நா. வின் மேற்பார்வையில் நடத்தப் படும் பொது வாக்கெடுப்பிலேயே உள்ளது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக நாங்கள் மீண்டும் வலியுறித்துகிறோம்.
இலங்கையின் இந்த நாடகத்தை புறம் தள்ளி தமிழர்களுக்கான நீதியை வழங்க வேண்டுமென்றும் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்றும் உலக நாடுகளையும் அய். நா. அவையையும் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்தரங்கில் பங்கேற்போர்:-

ஐயா புகழூர் விசுவநாதன்
( சிறப்பாசிரியர் – அறிவாயுதம் )

திரு.வைகோ,
( பொதுச்செயலாளர் – மதிமுக )

திரு.பண்ருட்டி வேல்முருகன்
( தலைவர்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி )

கவிஞர் காசி ஆனந்தன்
( தலைவர் – இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையம் )

ஐயா மணியரசன்
( தலைவர்- தமிழ்த்தேசிய பேரியக்கம் )

தோழர் விடுதலை இராஜேந்திரன்
( பொதுச்செயலாளர்- திராவிடர் விடுதலைக் கழகம் )

திரு.எம்.ஜி.தேவசகாயம் ஐ.ஏ.எஸ் ( ஓய்வு)

பேராசிரியர் திருநாவுக்கரசு
( தமிழீழ அரசியல் ஆய்வாளர்)

பேராசிரியர் மணிவண்ணன்
( அரசியல்துறைத்தலைவர் – சென்னை பல்கலைக்கழகம் )

திரு கா.அய்யநாதன்
( பொதுச்செயலாளர்-
தமிழர் தேசிய முன்னணி)

தோழர் அருள் இரத்தினம்
( பொதுச்செயலாளர் – பசுமைத் தாயகம் )

பேராசிரியர் த.செயராமன்
( ஒருங்கிணைப்பாளர் – மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு )

தோழர் தமிழ்நேயன்
( பொதுச்செயலாளர்- தமிழ்த்தேச மக்கள் கட்சி )

திரு.உ.தனியரசு எம்.எல்.ஏ.,
( தலைவர்- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை )

இயக்குநர் வ.கௌதமன்