வடக்கு கல்வி அமைச்சர் – தேசியக்கொடி விவகாரம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு

தேசிய கொடியை ஏற்ற மறுத்த வட மாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பான சகல குற்றச்சாட்டுக்களையும் சட்டமா அதிபரிடம் முன்வைத்து, அவரிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செயற்பாடுகள் சம்பந்தமாக தனது நிலைப்பாடடை தெளிவுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஊடகங்கள் வெளியிட்ட காட்சிகள் மற்றும் தேசிய கொடி தொடர்பான அமைச்சர் கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவு என்பன சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைவான முடிவு ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

வவுனியாவில் சிங்கள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார். அதேவேளை அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தால், அவர் அமைச்சர் பதவியை வகிப்பதில் பயனில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.