புலிகளை விடுவித்தது தவறு – பதறும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

11 ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுதலை செய்த மகிந்தவின் முடிவு பாராட்டத்தக்கதல்ல. கட்டுநாயக்க விமான நிலையம், இராணுவ முகாம்களைத் தாக்கியவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தலைமையகங்களை பத்தரமுல்லையில் ஒரே இடத்துக்கு மாற்ற கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த முடிவு பாராட்டப்படக் கூடிய ஒன்று அல்ல. அதேபோல், 11 ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுதலை செய்த மஹிந்த ராஜபக்ஸவின் முடிவும் பாராட்டத்தக்கதல்ல. கட்டுநாயக்க விமான நிலையம், இராணுவ முகாம்களைத் தாக்கியவர்களும் கூட, எந்த விசாரணைளுமின்றி விடுவிக்கப்பட்டனர். இந்த முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது தொடர்பில் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் ரஷ்யாவுக்குத் தெரியப்படுத்தப்படும். அதற்குப் பின்னரே கப்பலைக் கட்டும் பணி தொடங்கப்படும். கப்பலைக் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும். அது புதிதாக இருக்க வேண்டும். அமெரிக்காவும் எமக்கு இன்னொரு போர்க்கப்பலை வழங்கவுள்ளது. எமது கடல் பகுதியைப் பாதுகாப்பதற்கு, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கூட எமக்கு இராணுவ கப்பல்கலை வழங்கியுள்ளன.” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.