தனியார் எரிபொருள் நிலையங்கள் அரச உடமையாகும் நிலை!
“தனியார் எரிபொருள் நிலையங்கள் சில, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், எரிபொருளை மறைத்து வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்கின்றன. அத்தகைய நிலையங்கள் தொடர்பில், எதிர்வரும் 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,  அவைகளை அமைச்சுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்” என்று, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

“நாட்டில் தற்போது, போதியளவு எரிபொருள் காணப்படுகின்றது. அதில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால், கட்டாயம் அறிவிப்பேன்” என்றும் தெரிவித்தார்.

​பெற்றோலிய வளத்துறை அமைச்சில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“எந்தவிதத் தட்டுபாடுமின்றி எரிபொருளை எம்மால், எதிர்வரும் 3 வாரங்களுக்கு விநியோகிக்க முடியும். அத்துடன், இன்னும் இரண்டு வாரங்களில், எரிபொருள் தாங்கிய மூன்று கப்பல்கள், நாட்டுக்குள் வருகின்றன. இதனால், மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை” என்றார்.

“ஆனாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக, தற்போது அதிகளவான எரிபொருளை பெற்று வருகின்றனர். சாதாரணமாக ஒரு நாளைக்கு, 2,500 மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகிக்கப்படும். ஆனால், நேற்று, 3,500 மெற்றிக்தொன் எரிபொருளும் இன்று, 4,000 மெற்றிக்தொன் எரிபொருளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

“எரிபொருள் தொடர்பிலான தவறான தகவல்களை, குறுந்தகவல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் யார் என்பதைக் கண்டறிவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் தெரிவித்துள்ளேன். ​அவரும் ஆராய்ந்து பார்ப்பதாக எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்” என்றார்.

மேலும், “எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது தொடர்பில், எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனைகளை முன்வைக்க இருக்கின்றேன்“ எனவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*