ஈழத்தின் ஆஸ்தான அவைப்புலவன் புதுவையின் கவிதையொன்று.!

காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாது என் கணக்கு.!
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு!.
மரண பயமில்லை எனக்கு.

இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக் கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.

என் அப்பு எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்!

போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?!!

காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்!.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா…..

– புதுவை இரத்தினதுரை