யாழ்.மயிலிட்டி துறைமுகத்தை மறுசீரமைக்க அனுமதி!

யாழ்.மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்து மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் மோசமாக செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கடற்றொழில் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியையும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு அரசாங்கம் விடுவித்தது.

அதன் பின்னர், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மீள குடியமர்ந்துள்ளதுடன், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தை பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த துறைமுகத்தினை மீள பயன்படுத்துவதற்கான மறுசீரமைப்பு பணிகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.