மைத்திரி பஸில் அவசர சந்திப்பு!
இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய பேச்சு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு பஸில் ராஜபக்ச முயற்சித்து வருகிறார் என சு.க. உறுப்பினர்களாலேயே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதிக்கும், பஸிலுக்கும் இடையே தொலைபேசியூடாக இடம்பெற்றுள்ள கலந்துரையாடலானது கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளைச் சங்கமிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வண.மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்த சூழ்நிலையில் மேற்படி தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமையானது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம், இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகளின் தேக்க நிலைமை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பிலேயே தொலைபேசி ஊடாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைவதற்கு பஸில் ராஜபக்சவே பிரதான காரணம் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூணாக இருந்து சுதந்திரக் கட்சியை மிரட்டும் வகையில் இவரே செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*