சர்வதேச மனிதவுரிமைகள்10.12.2017 நாளாகும்!

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தங்களின் இனம், மதம், நிறம்,மொழி, பால், அரசியல், மற்றும் தேசியம் கருத்துகளிற்கு அப்பால் இயல்பாகவே சில அடிப்படை உரிமைகள் உள்ளன அவைதான் மனித உரிமைகள். இந்த மனித உரிமைகள் என்பவை மார்கழி 1௦ம் நாள் 1948ல் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், பாரிசில் உள்ள சைலட் (Chaillot) மாளிகையில் உலகளாவிய ரீதியில் தெரிவிக்கப்பட்டது. அத்தினத்திலிருந்து மார்கழி 10ம் திகதியே சர்வதேச மனித உரிமைகள் நாளாக திகழ்ந்து வருகின்றது.

எத்தனை சாற்றுரைகளும், சட்டங்களும் வெளிவந்தாலும், உலகளவிலே மனித உரிமை மீறல்கள் இன்னும் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. அதேபோல்தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டும், மீறப்பட்டும் வருகின்றது.

இலங்கைத் தீவு சுதந்திரமடைந்த 1948ம் ஆண்டு தொடக்கம் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றது.

சிங்களக் குடியேற்றம், ஈழத்தமிழர்களின் நிலங்களை அபகரித்தல், 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் கைது செய்தவர்களை சித்திரவதை செய்து கொல்லுதல், உண்மைகளை வெளியுலகிற்கு தெரிவிற்பதை தடுக்கும் நோக்கோடு ஊடகவியலாளர்கள் படுகொலை, ஈழத்தமிழர்களிற்கான நீதி மறுப்பு, ஈழத்தமிழர்களின் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கில் அதிகளவிலான இராணுவ பிரசன்னத்தின் மூலம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தல், அரசியல் கைதிகள் விவகாரம், 6ம் திருத்தச்சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் மறுத்தல், மீன்பிடி தொழில்களிற்கான பிரதேசங்களை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், புத்த விகாரைகளை தமிழர் பிரதேசங்களில் அமைத்தல், ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கோடு தமிழர் பிரதேசங்களில் சட்ட விரோதமான போதைப்பொருள் பாவனைகளை ஊக்குவித்தல், போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூற அனுமதி மறுத்தல், மாவீரர் துயிலும் இல்லங்களை
அழித்தமை, வெள்ளை வான் மூலம் தமிழ் இளைஞர்களை கடத்தியமை, பயங்கரவாத தடைப் பிரிவினரால் பொய் காரணங்களை கொண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படல், தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களிற்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஊக்குவித்தல் என சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுப்புரைகளும் மீறப்படுகின்றது.

இவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மனித உரிமை மீறளிற்கான பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. ஆயினும் ஈழத்தமிழர்களின் விடயத்தில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அமைதி காத்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்பை சர்வதேசத்துக்கு தொடர்ந்தும் எடுத்துரைக்கவும் , சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் , தாயகத்தில் 300 வது நாட்களை அண்மித்து வரும் காணாமல் போனோர்கள் உறவுகளின் தொடர்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பன்னாட்டு மனிதவுரிமை தினம் அன்று யேர்மன் தலைநகரில் “146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது ? ”
எனும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறுகின்றது.