வவுனியாவில் உந்துருளியில் வாளுடன் வந்த இருவர் காவல்துறையை தாக்கி விட்டு தப்பியோடம்!

வவுனியா, பசார் வீதியில் உந்துருளியில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த உந்துருளியொன்று ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிசார் குறித்த உந்துருளியை மறித்துள்ளனர்.

இதன்போது அதில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிசாரை காலால் எட்டி உதைந்துள்ளார்.

இதனையடுத்து போக்குவரத்து பொலிசார் ஒருவர் நிலை தடுமாறி கீழே வீழ்த்துள்ளார். போக்குவரத்து பொலிசார் கீழே வீழ்ந்ததும் உந்துருளியை வேகமாக செலுத்திய போது குறித்த உந்துருளியின் பின்பக்கத்தில் இருந்தவர் தவறி கீழே விழுந்துள்ளார்.அத்துடன் அவர்களால் கொண்டு செல்லப்பட்ட இரண்டு வாள்களும் இதன்போது கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த இளைஞன் தப்பியோடி விட போக்குவரத்து பொலிசார் இரு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, அவ்வீதியில் உள்ள சீசீடிவி கமராவை பரிசோதித்தால் குறித்த உந்துருளியினையும் சம்மந்தப்பட்ட நபர்களினையும் கண்டுபிடிக்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.