ஜேர்மனிய நிபுணர் சிறுநீரக நோய் குறித்து ஆராய வருகிறார்!

இலங்கையில் மிக வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மனைச் சேர்ந்த ​விசேட வைத்திய நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனிய விஜயத்தின் போது விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, அந்நாட்டு வைத்திய நிபுணர் பேராசிரியர் கால் உவே, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என, சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயற்குழு தெரிவித்தது.

இவர், அநுராதபுரம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில், இந்த நோய் தொடர்பில் ஆராய்ச்சி செய்யவுள்ளார்.

முன்னதாக, இந்நோய் தொடர்பிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் இந்நாட்டு வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களுடனான பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையில் சுமார் ஒரு வாரகாலம் தங்கவுள்ள பேராசிரியர், தான் தயாரிக்கும் ஆய்வறிக்கையை, ஜேர்மன் அரசாங்கத்திடம் கையளிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.