யாழில் சிறுமியைக் கடத்தியவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – புண்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியொருவரை கடத்தி சென்ற நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.

இந்தநிலையில் சிறுமியை காணாத பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, நேற்றைய தினம் இந்தக் கடத்தல் தொடர்பாக தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் அந்த நபரைத் தாக்கியதுடன் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறுமி துஸ்பிரயோகம் எதற்கும் உள்ளாக்கப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.