சமரசிங்கவின் சாதனைப் பாடல். (வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)

 

உஷ்..!
சத்தம் போடாதீர்கள்.
புன்னகை ததும்பும்
புத்தரின் தியானம்
கலைந்து விடும்..
உஷ்….!
சத்தம் போடாதீர்கள்.

நாட்டைப் பற்றி
நல்லது கதைக்க
அருகதையற்ற சந்ததி நீவீர்.

நீங்கள் போடும்
குப்பை மேட்டை சீராக்கி
எங்கள் புத்தரை
எழுந்தருளச் செய்கிறோம்.

நீங்கள்
கழிவுத் தொட்டியாக்கிய
குளங்களை அழுக்ககற்றி
தாமரை அல்லிகளை
பூத்திடச் செய்கிறோம்.

உங்கள் வீதிகள் தோரும்
குப்பை மேடுகள்.
உங்கள் கொள்கைகளும்
குறிக்கோளும்
பதவிப் பந்தயம்.

எலும்புத் துண்டாய் ஒரு
பதவி தந்தால்
சாணக்கியம் எனச் சொல்லிச்சொல்லி
வீணீர் ஊற்றி ஊற்றி
விழுந்து நக்குவீர்.

விழிப்போடு இருந்து
எங்கள் அடாத்தை
தட்டிக் கேட்கும்
உங்கள் இனத்தவரை
குத்திக் குருடாக்கி -அவர்
கொறவளையை நசுக்கி….
எங்கள் சாராயப் பாட்டியில்
ஓசியில் ஊத்தவும்
ஓடி வருவீர்.

எங்களோடு கைகோர்த்து
ஆடிப் பாடி விட்டு
வேதனையோடும்
தன்மானம் இழந்தும்
சதிராடியதாய் சாற்றி
முறுவலிப்பீர்.

வேலியையும் காணியையும்
சரியாய் பராமரிக்கத் தெரியாத
உங்களுக்கெல்லாம்
வேட்டி எதற்கு?
குஞ்சுகளை மறைக்கும்
கோமணந் தான் எதற்கு?

வெட்கம் கெட்டவர்களே
வெள்ளாடைக்குள் மறைக்கும்
உங்கள் ஈன புத்தியை விடவா
புத்த தேவனின்
புதுக் கொலுவிருப்புகள்
உங்களுக்கு இடஞ்சலாகிடும்??

மாவீரம் தொலைத்த
மடப் பயல்களே…
தேர்தலுக்காய் வாய்மூடி
பதவிப் பாதை பார்த்து
மௌனிகளாய் இருக்கும்
கள்ளத் தியான புருசர்களே..

சாணக்கிய உத்தி
சாணக்கிய உத்தி என
சனத்தை ஏமாற்றும்
சந்ததி இழி பிறவிகளே..
நீங்கள் அடக்கமாயிருங்கள்.
உங்கள் அமைதிக்காக
பதவி தந்து யாம் மகிழ்வோம்.

புத்தம் சரணம் கச்சாமி
புன்னகையோடு நீ
புதிது புதிதாய்
முளை சாமி.

வன்னிமகள் எஸ். கே. சஞ்சிகா.