ஆண்டாள் எனது தாயை போன்றவர் அவரை நானே சிறுமைப்படுத்துவேனா?

ஆண்டாள் எனது தாயை போன்றவர் அவரை நானே சிறுமைப்படுத்துவேனா என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார்.

கடந்த வாரம் தினசரி நாளிதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் வேறு ஒரு புத்தகத்தில் இருந்து ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆங்காங்கே வைரமுத்துவுக்கு எதிராக வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. மேலும் ஜீயர்கள், பெண்கள், பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், 3000 ஆண்டுகள் பழமையான மொழி தமிழாகும். நான் தொல்காப்பியர் முதல் தற்போதைய பாரதியார் மற்றும் புதுமைபித்தன் வரை தமிழ் இலக்கியத்துக்கு பிரபலங்களின் பங்களிப்பை ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

தற்போதைய தலைமுறையினர் தமிழை விட்டு மட்டுமல்லாது, படிக்கும் பழக்கத்தை விட்டே ஒதுங்கி தொழில்நுட்ப சாதனங்களில் கவனத்தை செலுத்தி வருவதால் பிரபலங்களின் படைப்புகளை ஒரே புத்தகத்தில் கொண்டு வர விரும்புகிறேன். இதுவரை திருவள்ளுவர் மற்றும் கம்பர் முதல் வள்ளலார் மற்றும் பாரதியார் வரை 13 சிறப்புகள் குறித்து எழுதியுள்ளேன்.

ஆழ்வார்கள் குறித்து கூறுவதற்கு ஆண்டாளை தேர்வு செய்தேன். ஆண்டாளின் தமிழானது 40 ஆண்டுகளாக நான் சுவாசித்து வருவதாகும். வைஷ்ணவர்களை காட்டிலும் அவரது தமிழுக்குள் சென்றுள்ளேன். அவரது தமிழை மட்டுமல்ல, பெண்களின் முன்னேற்றத்துக்கு அவர் எழுப்பிய குரலையும் நான் பாராட்டுகிறேன்.எனது கட்டுரையை 35 முதல் 40 நிமிடங்கள் வரை விவரித்தேன்.

அது அனைவரையும் சென்றடைந்தது. அப்போது ஆண்டாளை பாராட்டுவதற்காக அவர் குறித்து மற்ற படைப்புகளில் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டினேன். ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மறைந்த ஒரு தேவதாசி என்று கூறப்பட்டிருந்தது.

அதை நான் மேற்கோள் காட்டினேன். ஆண்டாள் கடவுளாக வாழ்ந்து அவருக்கு சேவை செய்வதற்காக படைக்கப்பட்டவர் என்ற அர்த்தத்தில் மேற்கோள் காட்டினேன். நான் தேவதாசியில் வரும் தாசி என்று நான் கூறிய வார்த்தையை சிலர் தவறுதலாக வேசி என்று நான் கூறியதாக புரிந்து கொண்டனர்.

நான் எந்த படைப்பிலிருந்து எடுத்தேன் அது மட்டும் தவறில்லை, ஆனால் நான் குறிப்பிட்டது மட்டும் தவறா.அந்த வார்த்தையை நான் ஆண்டாளை சிறுமைப்படுத்துவதற்காக பயன்படுத்தவில்லை. எனது தாய் எனக்கு தாய்ப்பாலை ஊட்டினார். அதை போல் ஆண்டாள் எனக்கு தமிழ் பாலை ஊட்டினார். அப்படியிருக்கும் போது எனது தாயை நான் எப்படி அவமதிப்பேன்.

இது ஆய்வு பணிகள் மற்றும் எழுத்தாக்கம், இது எல்லாரும் புரிந்து கொள்ள முடியாது. அதை நான் கூறினால் என்னை மீண்டும் தவறாகவே நினைப்பர். இந்த சர்ச்சை அரசியல் சதியா அல்லது வேறு ஏதாவதா என்று எனக்கு தெரியவில்லை.நான் கூறியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்.

தமிழ் எழுத்தாளர்களும் நான் பேசியது உண்மைதான் என்கின்றனர். இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தாயிற்று, இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும். ஆண்டாளை அவதூறாக பேச வேண்டும் என்று நான் நினைத்திருந்தால் அவரது பிறந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றா எனது சொற்பொழிவை ஆற்றியிருப்பேன்?.

நான் கற்ற தமிழ் மூலம் தமிழ் இலக்கியதிற்கு ஆண்டாள் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்ட நினைத்தேன். ஆண்டாளின் படைப்புகளை முதல் முறையாக பகுத்தறிவுவாதியாகிய நான் பாராட்டியுள்ளேன். எனது பணிக்கு நான் உண்மையாக உள்ளேன்,. என் பக்கம் நியாயம் இருக்கிறது. இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*