தரம் குறைந்திடாது…!

ஆழியாகப் பரந்து கிடக்கும்
அழிவே அற்ற அணையாத
அன்பு மார்க்கம் அது,
ஆதியும் அந்தமும் அற்றது.
*
வேலி வரம்பேதும் இல்லாத,
விசாலமான மிகநீண்ட வழியது.
விரும்பியவர் வழிதேடலாம்
விரும்பாதவர்கள் விலகிடலாம்.
*
கேலி செய்வதற்கு அங்கு ஏதும் இல்லை
கேள்வி கேட்கும் தகுதி எவர்க்கும் இல்லை.
வேள்வியின் விகுதியால் பயனேதுமில்லை
கிளர்ச்சியைத் தூண்டுவதே நிகழ்வின் எல்லை.
*
தாலி போல காக்கிறோம் தமிழை, என்று
தம்பட்டம் அடித்தவர்கள், தடம் இன்றிய
தரம் கேட்ட தரவுகளைத் தந்து இன்று
தத்தளித்து நிற்பதுவும் நன்றோ?
*
சோலிகளை எல்லாம் விட்டு வந்து
சோகக்கண்ணீர் வடிப்பதாக தங்கள்
சாயங்களை வெளுக்கிறார்கள் இங்கே,
சதி மாயங்கள் தான் நடப்பவை எல்லாம்.
*
போலி மதப்பிரியர்கள் பொந்துகளில் இருந்து
பொது வெளிக்குவந்து முகம் காட்டி
பொல்லாப்பு வாசனங்களை பேசியே
புனிதமார்கத்தை புதைகுழிக்குள் தள்ளுவதேன்.
*
கூலிப்படை இவர்கள் எனப்பார்க்கும்
கண்களுக்குமா புரிந்து விடாது.
காவியணிந்து கழிசடை வசனங்களை
காரி உமிழ்வது தான் கடவுள் பணியா?
*
ஒளி தரும் சூரியனை பார்த்து
ஒப்பாரி பாடும் ஓநாய்களால் ஒன்றும்
ஒப்பற்ற அந்த ஒளி மங்கிடாது .
ஒளிக்கு களங்கம் பாடியதால்
ஒருபோதும் அதன் தரம் குறைந்திடாது.
ஆதிநேசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*