தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பு!

தமிழகம் முழுவதும் 2 மடங்கு பஸ் கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வு தெரியாமல் பயணம் செய்த பலர் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். மேலும், நடத்துனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் பல இடங்களில் மறியல் போராட்டமும் நடந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை வாபஸ் பெறும்படி தமிழக அரசுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் 2006ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது.பின்னர், 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக 60 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது. கச்சா விலை உயர்வை காரணம் காட்டி இந்த கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், சில மாதங்களுக்கு பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கட்டணம் குறைக்கப்படவில்லை.

இந்தநிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் பஸ் கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. அந்த உத்தரவு அதிகாலை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. திடீரென பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கட்டண உயர்வை அறியாமல் பலர் சரியான சில்லறையுடன் பஸ்சில் பயணம் செய்தனர். அவர்களிடம் நடத்துனர் கூடுதலாக கட்டணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் நடத்துனருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பயணிகள் கண்டக்டர்களிடையே ஆங்காங்கே வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி, உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தாத பயணிகள் பலரை நடத்துனர்கள் பாதி வழியிலேயே இறக்கி விட்டனர்.

இதனால், பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் இந்த கடுமையான கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பஸ் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இதனால், தனியார் பஸ் கட்டணமும் ஓரிரு நாளில் கடுமையாக உயருவதற்கு வாய்ப்பை அரசு உருவாக்கியுளளது. இந்த பஸ் கட்டண உயர்வால், பொதுமக்கள் நேற்று காலை முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் கட்டண உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி கல்லணை அருகே திருவளர்சோலை பகுதியில் 3 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சூளகிரி பேருந்து நிறுத்தம் எதிரே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இரு மடங்கு கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர். கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள விசாரணை அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில்- பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து பயணிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் பழைய டிக்கெட் கொடுத்து கூடுதல் பணம் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பஸ் கண்டக்டர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல இடங்களில் மறியல், முற்றுகை போராட்டம் நடந்தது. இதற்கிடையே கடுமையாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறும்படி அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாமக சார்பில் கட்டண உயர்வை எதிர்த்து 25ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.235 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.372 ஆகவும், ஏசி பஸ்களில் ரூ.496 ஆகவும் உயர்ந்து விட்டது.

2. மதுரைக்குச் செல்லும் கட்டணம் ரூ.325ல் இருந்து ரூ.515 ஆகவும், திருநெல்வேலிக்கு ரூ.695 ஆகவும் உயர்ந்து விட்டது.

3. நாகர்கோவிலுக்குச் செல்லும் கட்டணம் ரூ.778 ஆகவும், கோவைக்கு ரூ.571 ஆகவும், தஞ்சாவூருக்கு ரூ.439 ஆகவும் உயர்ந்துள்ளது.

4. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் குறைந்த பட்சம் ரூ.372 ஆகவும், அதிகபட்சம் ரூ.778 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

5. வெளியூர் செல்லும் ஏசி பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.496 ஆகவும், அதிகபட்சம் ரூ.1038 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*