எட்டு காளையை அடக்கியது என் மன உறுதிக்கான வெற்றி!

அலங்காநல்லூர்… மதுரை மாவட்டத்தில் ஒரு ஊர் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது. தமிழகம் மட்டுமல்ல… பிறமாநிலங்கள்.. அட உலக அளவில் ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற ஊருங்க இது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு ஜல்லிக்கட்டு விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 16ம் தேதி அங்கு நடந்த ஜல்லிக்கட்டில்தான், 8 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றிருக்கிறார் அதே ஊரைச்சேர்ந்த அஜய். இனி அவரை பேச விடுவோமே…?

உங்களை பற்றி சொல்லுங்களேன்?

அப்பா செல்வம். அம்மா செல்வி. அண்ணன் விஜய். அப்பா, அண்ணன் டிரைவராக இருக்காங்க. நான் டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். டிரைவிங் தெரியும். வேலை தேடிக்கிட்டிருக்கேன்.

மாடு பிடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற ஊர் அலங்காநல்லூர். அதனால இயல்பாகவே எனக்கு அதன் மீது தீராத ஆசை ஏற்பட்டது. எங்கள் வீட்டுல யாருமே மாடுபிடி வீரர்கள் கிடையாது. உறவு முறை சகோதரர் ஒருவர் மூலமாகத்தான் ஆர்வம் அதிகரித்தது. மேலும், எங்க ஊரை சேர்ந்த நாகராஜ், மாயாண்டி போன்றவர்கள் பயிற்சி அளித்தனர்.

மாடு பிடிக்கும் பயிற்சி எப்படி அளிக்கப்படுகிறது?

தோட்டத்துல காளையை கட்டி வச்சிருப்பாங்க. முதல்ல காளையோட குணத்தை கண்டுபிடிக்கணும். காளைகள் பொதுவாக இடது அல்லது வலது புறமாகத்தான் பாயும். தொடர் பயிற்சியில மற்ற காளைகளை பார்த்தும் இதை நாம புரிஞ்சுக்கலாம். காளை அசரும்போது கண்ணிமைக்கும் நேரத்துல திமிலை இறுக பற்றணும். இந்த பிடிக்கு கபடி விளையாட்டுத்தான் மிகச்சிறந்த பயிற்சி. அங்கே இடுப்பு, காலை இறுக பற்றுவது போலத்தான்.

மாடுபிடி வீரராக வேறு என்ன மாதிரியான பயிற்சி எடுக்க வேண்டும்?

முதல்ல ஒரு கபடி வீரராய் இருக்கணும். இதுலதான் எதிராளியோட பலவீனம் அறிந்து செயல்படும் பயிற்சி கிடைக்கும். வேகமாகவும், விவேகமாகவும் முன்னேறி ஆளை அடிக்கிறது, தொடர் மூச்சு பயிற்சி கிடைக்கும். இளம் வயதிலேயே பயிற்சி எடுத்தாலும், நான் கடந்த 2 வருஷமாத்தான் தீவிர பயிற்சியில இறங்கினேன்.

அலங்காநல்லூர்ல 8 காளை பிடித்ததுதான் உங்க சாதனையா?

இல்லை. சிவகங்கை அருகே கிருங்காக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கி உள்ளேன். அதற்கு பெரிய அளவில் பரிசுகள் கிடைக்கவில்லை. உசிலம்பட்டி அருகே எஸ்.வலையம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 7 காளைகளை அடக்கி உள்ளேன். இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

தடைக்கு பிறகு கடந்தாண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல பங்கேற்றீர்களா?

ம்… 4 காளைகளை அடக்கினேன். அந்தாண்டு தொடர்ச்சியாக நடந்த அனைத்து ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றேன். எனக்கு ஒரு ஆசை என்னான்னா, ஒவ்வொரு ஆண்டுக்கும் நடக்குமா, நடக்காதாங்கிற குழப்பம் நீங்கி, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்ேத தீரணும். இதுவே என் விருப்பமாக அரசுகள் கிட்டே கோரிக்கையாக வைக்கிறேன்.

உடல் வலிமைக்கு சிறப்பு உணவுகள் எடுத்துக்குவீங்களா?

மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் சிறப்பு உணவுகள் எடுத்துக்கிறதில்லை. சாதாரணமா வீட்ல சாப்டுறதுதான். எல்லா வீரர்களுமே ஜல்லிக்கட்டுல பங்கேற்கிற ஒரு மாதத்துக்கு முன்பில் இருந்து, அசைவ உணவுகளை சாப்பிட மாட்டோம். உடல் வலுவாக இருப்பது முக்கியம்தான். ஆனால், அதை விட ஜல்லிக்கட்டுல மன உறுதிதான் முக்கியமானது.

அலங்காநல்லூர் அனுபவத்தை சொல்லுங்களேன்?

முதல் நாள் (ஜன. 15) பாலமேடு ஜல்லிக்கட்டுல ஒரு காளையைத்தான் அடக்கினேன். அதுக்குள்ள காளை கொம்பு குத்தி தொடையில காயம். தொடர்ந்து பங்கேற்க முடியலை. மறுநாள் நம்ம ஊருல (அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டு. பங்கேற்பதா, வேண்டாமான்னு யோசிக்கக்கூட இல்லை. மன உறுதியோடு களமிறங்கினேன். 4 காளைகளை அடக்கிட்டேன். இது போதும்… கிளம்பிடலாம்னு முடிவு பண்ணேன். என் பிரண்ட் சக்திதான், ‘டேய் மச்சான்… உன்னாலே முடியும்டா… போய் களத்துல நின்னு விளையாடு. இன்னும் காளையை அடக்குடா’ன்னு உற்சாகப்படுத்தினான். துணிச்சலா களமிறங்கினேன். 8 காளைகளை அடக்கினேன். 2 பேரா சேர்த்து பிடிச்சதை கணக்கு பண்ணா 11 வரும்.

கார் பரிசு கிடைச்சதும் எப்படி உணர்ந்தீங்க?

ரொம்ப சந்தோஷப்பட்டேன். வீட்ல பெரிய வசதி எல்லாம் இல்லை. களத்துல காட்டின கடின உழைப்புக்குத்தான் கார் பரிசாக கிடைத்தது. இன்னும் பல போட்டிகளில் பங்கேற்கணும்.

வீட்ல காளை வளர்க்குறீங்களா?

குடும்பத்தினர், நண்பர்களோடு சேர்ந்து 3 காளைகளை வளர்க்கிறேன்.

உங்க ஊரு மக்கள் கொண்டாடியிருப்பாங்களே?

எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு போட்டியை தெய்வத்துக்கு சமமாய் மதிக்கிறாங்க… எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம். சொந்த மண்ணுல சாதிச்சுட்டேடா… ன்னு எல்லோரும் பாராட்டுறாங்க… அப்படியே பறக்கிற மாதிரிஇருக்கு. வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி. கை குலுக்கி விட்டு விடைபெற்றோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*