மலேசியர்கள் மின்னஞ்சல் வழி அமெரிக்க விசா பெற தூதரகம் அனுமதி!

கோலாலம்பூர் – மலேசியர்கள் தங்களது அமெரிக்க விசாவை இனி மின்னஞ்சல் வழியாகவே புதுப்பிக்க அமெரிக்கத் தூதரகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இதற்கு முன்பு, அமெரிக்க விசாவைப் பெற இணையம் வழியாக விண்ணப்ப பாரத்தைப் பெற்று அதை பூர்த்தி செய்து, பின்னர், தூதரகத்திற்கு நேர்முகத்தேர்வுக்குச் சென்ற பின்னரே பெறும் நடைமுறை இருந்து வந்தது.

தற்போது அமெரிக்க விசாவைப் புதுப்பிக்க நினைப்பவர்கள், விசா காலாவதியாவதற்கு முன்னரோ அல்லது காலாவதியாகி 12 மாதங்களுக்குள்ளோ மின்னஞ்சல் வழியாக, நேர்முகத்தேர்வு இன்றி விசாவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் மலேசியர்களுக்கு இந்த புதிய நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்திர் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், “எமது அரசாங்கம் விசா நடைமுறைகளை மலேசியர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க விரும்பியது. அமெரிக்க விசா அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று இங்கு ஒரு மனப்போக்கு இருக்கிறது. அதனால் நேர்முகத்தேர்வுக்கு வரும் போது மக்கள் கவலையுடன் வருகிறார்கள். உண்மை என்னவென்றால், சுற்றுலா மற்றும் தற்காலிக வர்த்தக விசாவுக்கு விண்ணப்பிக்கும் மலேசியர்களுக்கு 95 விழுக்காடு விசா வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*