மஹா சிவராத்திரி விரதம் இன்று!

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி விரதம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது இந்துக்களில் நம்பிக்கை.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என கருதப்படுகின்றது.

இப்படி 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு, இன்று ஆலயங்களில் 04 யாம பூஜைகளும், விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.

இதேவேளை சிவராத்திரி விதத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சிவ வழிபாடானது, நான் எனும் மமதையையும், அகந்தையையும் இல்லாதொழிப்பதன் மூலமே உயர்வினை அடையலாம் என்பதை எடுத்துக் காட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹா சிவராத்திரி விரதமானது, மனித மனங்களில் உள்ள தீய எண்ணங்கள் எனும் இருளை நீக்கி அமைதி எனும் ஞான ஔியை குடிகொள்ள செய்து மனிதர்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த உதவுகின்றது எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மானிட சமூகத்தினை நல்வழிப்படுத்தும், சமய நம்பிக்கையைுயம் சமூக விழுமிய பண்புகளையும் மென்மேலும் மக்களிடையே வேரூன்ற செய்யும் மகா சிவராத்திரி தினத்தை கொண்டாடும் சைவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி அதனூடாக இறைவனை காணும் உயரிய இந்து பாரம்பரியத்தை கொண்ட இலங்கை வாழ் இந்துக்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*