சேதமடைந்த தாள்களை மார்ச் 31 இன் பின் மத்திய வங்கியில் மாற்றலாம்!

பொதுமக்களால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சிதைந்த நாணயத்தாள்களை மாற்றும் சேவையை மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல்வரை மத்திய வங்கியில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்த நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் சமர்ப்பித்து அல்லது அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களின் ஊடாக அதற்குரிய விண்ணப்பத்துடன் பதிவுத் தபாலில், அனுப்பிவைப்பதன் மூலம் புதிய நாணயத்தாள்களை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்குரிய விண்ணப்பப் படிவம் www.cbsl.gov.lk என்ற மத்திய வங்கியின் இணையத்தளத்தில் அல்லது மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் அல்லது அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தவறுதலாக நாணயத் தாள்களில் ஏற்படுகின்ற புள்ளி அல்லது சிறிய கீறல்கள் போன்றவற்றின் காரணமாக, குறித்த நாணயத்தாள்கள் முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகக் கருதப்படாது. அவ்வாறான நாணயத்தாள்களை கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்த முடியும்.

அது மாத்திரமன்றி தொடர்ச்சியான பாவனையால் ஏற்படுகின்றன தேய்வு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் சேதமான நாணயத்தாள்களை அங்கீகராரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் மாற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தானியங்கி இயந்திரங்களுக்கு நாணயத்தாள்களை உள்ளீடு செய்யும்போது சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களை உள்ளிடாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு வர்த்தக வங்கிகளுக்கு, மத்திய வங்கி பணிப்புரை விடுத்துள்ளது.

ATM இயந்திரங்களிலிருந்து அவ்வாறு சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களைப் பெற்றுக் கொண்டால் அருகிலுள்ள குறித்த வங்கிக் கிளையில் அதனை மாற்றிக் கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.


Powered by Blogger.