தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு ஆபத்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டு வருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளோடு இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை தாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இன்றும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் முதல்வர் தெரிவில் நாம் போட்டியிட்டிருந்தோம்.
நாம் முன்னெடுத்து வந்த கொள்கை வழியிலான பதவிகளுக்கு சோரம் போகாத அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின் சபைகளில் ஆட்சியமைப்பதில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் அவர்களின் ஆதரவினைக் கோரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டினையும் கடைப்பிடித்து வந்திருந்தோம்.
அந்த வகையில் தமிழினத்தை மாறி மாறி இனவழிப்பு செய்த சிங்கள பேரினவாத கட்சிகளுடனும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களுடனும் பதவிகளுக்காக கூட்டிணைந்து நாம் கூட்டமைப்பு பற்றி கூறிவரும் கருத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபித்துள்ளனர்.
இன்று தமிழ் தேசியவாதிகள் ஒருபுறமாகவும் தமிழின விரோதிகள் மறுபுறமாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.
ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது.
எத்தனை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டாலும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியப் பற்றுறுதியுடன் எமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதோடு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அயராது உழைப்போம்.
அதற்காக நாம் எமக்குக் கிடைத்த அரசியல் களங்களைப் பயன்படுத்துவோம் என்பதனை இந்த நேரத்தில் எமது பாசத்திற்குரிய மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் கள யதார்த்தத்தினைப் புரிந்துகொண்டு தமிழர் விரோத சக்திகளிடமிருந்து எம்மினத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து மக்களும் எமது அரசியல் இயக்கத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு உரிமையோடு வேண்டிக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.