நம்பிக்கையில்லா பிரேரணையை, சட்டமா அதிபருக்கு அனுப்பி, நேரத்தைக் கொல்லவேண்டாம்!

தனக்கெதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, சட்டமா அதிபருக்கு அனுப்பி, நேரத்தைக் கொல்லவேண்டாமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடுந்தொனியில் தெரிவித்தமையை அடுத்தே, அந்தப் பிரேரணையை குறுகிய காலத்துக்குள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு, தீர்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தொலை​பேசியில் பல்வேறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினரென செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டார் எனினும், சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அருகில், அவரை வலுக்கட்டாயமாக, தள்ளிக்கொண்டுபோய்தான், பிரேரணையை கையளித்தனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க மற்றும் ​பாலித்த தெவரபெரும ஆகியோரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகயில் கைச்சாத்திடுவர் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அந்த நால்வருமே கையொப்பமிடவில்லை. 

இவ்வாறான நிலையிலேயே, தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுக்கவேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு கடுமையாக அறிவுறுத்தியுள்ளார் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.   
Powered by Blogger.