பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுடன் ஓர் நாள்.!

1997 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. வன்னிப் பெருநிலப்பரப்பை இரண்டறுத்து A9பாதையூடாக ஆனையிறவை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பேன் என்று சண்டையில் இறங்கி இருந்தார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுரத்தரத்வத்த. " வெற்றி உறுதி" என்றும் "ஜெயசிக்குரு" என்றும் ஒன்றரை வரைடத்துக்கு மேலாக நடந்த நீண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை அது. அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்ததும் ஒட்டுமொத்த இராணுவ அதிகாரத்தை கொடுத்திருந்ததும் அன்றைய ஆட்சிக்கதிரையில் இருந்த சந்திரிக்கா அம்மையார். அந்த காலம் நான் மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலய மாணவன். அப்போது மல்லாவி பிரதேசத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர் இளம்பருதி அண்ண. சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கல்விச்செயற்பாடுகளில் எந்த குறைவுமற்று முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இலங்கையிலையே முன்னணி மாவட்டங்களாக திகழ்ந்தது வரலாறு. நாம் அதற்காக முனைந்திருந்தோம். கற்றலில் மத்திமம் என்றாலும் கற்றோம். அந்த வேளையில் இளம்பருதி அண்ணையால் எமக்கான பின்களப்பணி ஒன்றுக்கான அழைப்பு வருகிறது. சின்ன வயசுக்காறர் என்று இல்லாது " மச்சான் என்ன மாதிரி ஒரு 30 பேர் பங்கர் வெட்ட போய்வருவமே " கேட்டதற்கு எந்த மறுப்பும் இல்லாது மாங்குளம் பகுதியை நோக்கி பயணிக்கின்றோம். புளியங்குளத்தில் இருந்து முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை தடுத்து நிறுத்தியும், வலிந்தும், ஊடறுத்தும் என எமது சண்டை அணிகள் எதிரியை திணறடித்துக் கொண்டிருக்க மாங்குளம் பகுதி மிக நேர்த்தியாக பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. பல தடைகளைத் தாண்டி எதிரி வந்தாலும் மாங்குளம் தாண்டி முன் நகர விட கூடாது என்ற இறுக்கமான முன்னேற்பாடுகள். பெரும் தளபதி ஒருவரின் நேரடிக் கண்காணிப்பில் நடந்தது. நாம் மூவர் கொண்ட அணிகளாக்கப்பட்டு பொருத்தமான இடங்கள், திசைகள் அனைத்தும் காட்டப்பட்டு பல வடிவ பதுங்ககழிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. நேரம் மதியத்தை தாண்டிக் கொண்டிருக்க அந்த பகுதி வேலைக்கு பொறுப்பாக இருந்த போராளி எம் அனைவரையும் உணவு உண்பதற்காக அழைக்கிறார். எமக்கும் பயங்கர பசி அத்தோடு களைப்பு. கூப்பிட முன்னரே சாப்பாட்டுக்காக ஏங்கத் தொடங்கி இருந்தோம் வெளியில் சொல்ல முடியாத உணர்வு. சாப்பாடு என்றதும் ஓடிச் செல்கிறோம். அருகில் இருந்த வீட்டுக் கிணற்றில் கை கால்களை கழுவி கொண்டு சாப்பிட அமர்ந்தோம். அப்போது தான் அந்த உருவம் எம்மை நோக்கி வந்து கொண்டிருந்தது. முதன்முதலாக நேரில் சந்தித்த போது இனம்புரியாத உணர்வால் தவித்தோம். பால்ராஜ் அண்ணையடா அருகில் நின்ற மனோ என் காதுக்குள் கிசுகிசுத்தான். எனக்கு எதையும் உணர முடியாத உணர்வு அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரோ தன் போராளிகளுக்கு ஒரு அண்ணனாக எப்படி வாழ்கிறாரோ அதைப் போலவே எம்முடனும் நெருங்கி நின்றார். தம்பியாக்கள் எப்பிடி இருக்கிறியள்? வீட்ல எல்லாரும் சுகமாடாப்பா?" அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அளவு மகிழ்வில் திளைத்திருந்தோம் நாம். யாருக்குமே வார்த்தை வரவில்லை. ஒரு பெரும் தளபதி சாதாரணமாக இவ்வாறு நடந்து காவலரண் நிலையமைப்புக்களை பாரப்பாரா? எம்முடன் இவ்வாறு நடந்து கொள்வாரா? என்று பல கேள்விகள் எழுந்த போதும் உடனடியாகவே அதற்கான பதிலும் கிடைத்தது. இவர்கள் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் அவர்கள் இவ்வாறு தான் இருப்பார்கள். மனசு பல எண்ணங்களில மிதந்து கொண்டிருக்க அப்பா சுகமாக இருக்காரா? என்று என்னிடம் வினவுகிறார். அப்பா சுகமாய் இருக்கிறார் என்றும் போன கிழமை உங்களை சந்திச்சதாக சொன்னவர் என்றும் சொன்னேன் சரிடாப்பா கவனமாய் படி சரியா.. என்ற போது எனக்குள் அந்த பிரமிப்பு என் தந்தையும் பால்ராஜ் அண்ணையும் இயக்க வேலைகளாக அடிக்கடி சந்திப்பவர்களாக இருந்தாலும் கூட எனது குடும்பத்தை பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கும் திறனும் எங்கள் மீதான நலனும் பிரமிக்க வைத்தன. இவ்வாறாக அன்றைய மதிய பொழுது கரைந்து கொண்டிருக்க உணவுக்காக நாம் தயாராகி இருந்தது கண்டவர் எம்மோடு சேர்ந்து உணவுண்பதற்கு தயாராகினார். எமக்கும் மகிழ்வைன்றால் வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு வானுயர்ந்து நின்றது பால்ராஜ் அண்ண எம்முடன் சாப்பிட போறாரா? அதுவும் எமக்காக வந்திருந்த உணவையா? நண்பர்களுக்குள் முனுமுனுப்பு எழுந்த போது என் கையில் இருந்த சொப்பிங் பையில் வந்திருந்த பருப்பு கறியையும்.( அது பருப்புக் கறி என்று சொன்னால்தான் தெரியும் ஏனெனில் மருந்துக்கு கூட அதற்குள் பருப்பு இல்லை வெறும் தண்ணி போல் இருக்கும். சில பருப்புக்கள் அங்கும் இங்கும் மிதக்கும் இது தான் போராளிகளுக்கான தின உணவு) உரப்பையில் வந்திருந்த பாணையும் குடுக்கிறேன். ஒரு மண் குவியலில் அமர்ந்து எம்முடன் சாப்பிட தொடங்கியவர் சாப்பிடாமல் எரிச்சல்பட்டார். உணவு கொண்டு வந்த போராளியை கூப்பிட்டு கோவப்பட்டார். இவர்கள் போராளிகள் அல்ல இவ்வாறான உணவை சாப்பிட இவர்கள் மாணவர்கள் இப்படி சாப்பாட்ட கொண்டு வந்திருக்கிறாய்? உனக்கு அரை மணித்தியாலம் தரலாம் உடனடியாக வேறு உணவு கொண்டு வா இல்லை என்றால் நடக்கிறது வேற என்று சத்தமிட்டார். நாமும் உணவைத் தவிர்த்து எழுந்து நின்றோம் நீங்க இருங்கோடாப்பா என்று எம்மை இருத்தி விட்டு கொஞ்சம் பொறுங்கோடாப்பா இப்ப சாப்பாடு வரும் என்று பொறுமையோடு இருந்தார் நாம் அதிர்ச்சியோடு அமைதியானோம். உணவு கொண்டு வந்த போராளி சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறார் சுவையான மாட்டுக்கறி அவர் கையில் சுமந்து வருகிறார் எமக்கு பாணும் மாட்டு இறைச்சியும் பரிமாறப்படுகிறது. நாமும் பால்ராஜ் அண்ண எம்மீதும் எம் மக்கள் மீதும் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் நேரில் கண்ட மகிழ்வில் மாட்டு இறைச்சியை சுவைக்கிறோம். ஆனால் பால்ராஜ் அண்ணா எமக்காக முதலில் தருவிக்கப் பட்டிருந்த பருப்புக் கறியுடன் பாணைத் தொட்டு சுவைத்து ரசித்து உண்கிறார். நான் அவருக்கு என் கறியை குடுக்க முனைந்த போது "நாங்கள் போராளிகள் இப்படித்தான் வாழ வேண்டும் நீங்கள் சாப்பிடுங்கோடாப்பா" அமைதியாக சிரித்துக் கொள்கிறார். எமக்காக வந்திருந்த பருப்புக்கறி வேறு இடத்தில் தங்கி இருந்த அவரது போராளிகளுக்காக அனுப்பப்படுகிறது. உணவு முடிந்து அடுத்த பக்க வேலைகளை பார்க்க புன்னகையோடு நகர்கிறார் அவர். அந்த புன்னகையோடே அவர் பூக்கள் தூவப்பட்ட சந்தனப்பேழையில் உறங்கிய போது விழி கரைவதை தவிர வேறு என்ன எனக்கு இருந்தது...? நினைவுகளோடு கவிமகன்.இ
Powered by Blogger.