சுதந்திர கட்சியின் ஆதரவின்றி ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது!

சுதந்திர கட்சியின் ஆதரவின்றி ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் யார் எப்படி நடந்துகொண்டாலும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருந்திருப்பின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பலம் கிடைத்திருக்காது என ஜனாதிபதி கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது.
இந்த தேர்தல் பெறுபேறுகள் குறித்து எவரும் குழப்பமடையவோ, குதூகலிக்கவோ தேவையில்லை என்றும், இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித குறையுமின்றி மேற்கொள்ள கட்சி தலைவர் என்றவகையில் தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.