கே.பி.யின் கப்பல், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடித்து அழிப்பு!

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும் 8 ஜீப் வண்டிகள்,  விடுதலை புலிகளுக்கு சொந்தமான பின்னர் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட வெலின்  அல்லது ஏ 522 எனும் கப்பல் ஆகியன இன்று நீர்கொழும்புக்கு அண்மித்த மேற்குக் ஆழ் கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டன.

கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.

வாகங்களிலும் கப்பலிலும் இருந்த பெறுமதி வாய்ந்த தொலைத் தொடர்புகள்  சாதனங்கள், பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட பின்னர் அவை இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்க செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தின்  போது முன்னாள் ஜனாதிகதிகளான ஜே.ஆர். ஜயவர்தன,  ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  உள்ளிட்டோர் பயன்படுத்திய 25 வாகனங்கள் இவ்வாறு கடலில் மூழ்கடித்து அழிக்கப்படவுள்ள நிலையில் இன்று அதில் 8 வாகனங்கள் மட்டுமே அழிக்கப்பட்டன.

இந்த குண்டு துளைக்காத வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ள நிலையில் அவற்றை மீளத் திருத்த அவ்வாகனத்தின் உண்மை விலையை விட அதிக செலவு ஏற்படும் என்பதால் இவ்வாறு அழிக்க தீர்மனைக்கப்பட்டது. சூழல் மாசுபடாமல் அழிக்கும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையின் அடிப்படையிலேயே இந்த வாகனங்கள் இவ்வாறு கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த குண்டு துளைக்காத வாகனங்கள்  ஜனாதிபதி செயலகம் ஊடாக அழிப்பதற்காக கடற்படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், கடற்படையின் பொருட்களை சுமக்கும் சிறப்பு கப்பல் ஊடாக அவை  கொழும்பு துறை முகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பின்னரே உரிய முறைமைகளைப் பின் பற்றி அவை அழிக்கப்பட்டன.

இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டால், அவை பாதாள உலகக்குழு உள்ளிட்ட குற்றம் புரிவோரின் கைகளுக்கு கைமாறும் பட்சத்தில் அது நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இவ்வாறு மூழ்கடித்து அழிக்கும் முறைமையைக் கையாண்டதாக  அழிக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த உயர் கடற்படை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதனைவிட  இந்த 8 வாகனங்களுக்கு மேலதிகமாக விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வெலின் எனும் கப்பலும் இன்று மூழ்கடிக்கப்பட்டது.  இந்த கப்பலானது புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த அதன் சர்வதேச தலைவராக செயற்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில், கே.பி. கைதான பின்னர் அக்கப்பலானது இந்தோனேஷியாவில் இருந்து  கடற்படையினரால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து வெலின் கப்பல் ஏ 522  எனும் பெயரிலும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டது. பல வருடங்கள் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட குறித்த கப்பல், பயன்படுத்த முடியாத நிலைமையை அடைந்துள்ள நிலையில் அக்கப்பலை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் அக்கப்பலை கொள்வனவு செய்ய குறைந்த பட்ச ஏலத்தொகைக்கு கூட எவரும் கோராத நிலையில் கப்பலை அழிக்க தீர்மானிக்கப்பட்டு, அதுவும் ஆழ் கடலுக்கு இரு விஷேட கப்பல்களின் உதவியுடன் இழுத்து செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. பயன்பாட்டு நிலைமையால் இல்லாத இந்த கப்பலானது ரங்கல கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு ஆழ் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.