பாராளுமன்ற உறுப்பினர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து!

பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை சகல வெளிநாட்டு பயணங்களையும் இரத்துச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளிநாடு சென்றுள்ள உறுப்பினர்கள் அனைவரையும் தமது பயணங்களை சுருக்கிக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதி நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
"தற்பொழுது கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் குறிவைக்கவில்லை. அரசாங்கத்தையே குறிவைத்துள்ளது. இந்தப் பிரேரணையை நிச்சயமாகத் தோற்கடிப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை காலதாமதப்படுத்தி தமிழ்,சிங்கள வருடப்பிறப்புக்குப் பின்னர் எடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முயற்சித்தனர். எனினும், அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளித்துள்ளது" என்றார். அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் எந்தவொரு உறுப்பினருக்கும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தார்மீகப் பொறுப்பு கிடையாது. அப்படி ஆதரவளிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 4ஆம் திகதிக்கு முன்னர் தமது பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் நாம் புதிய பயணத்தை உத்வேகத்துடன் ஆரம்பிப்போம். அரசாங்கத்தை காலைப்பிடித்து இழுப்பவர்களுக்கு அரசில் இடமில்லை என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது ஏப்ரல் 4ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடி கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்மானிக்கவிருப்பதுடன், சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்  ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியினர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்தாலும் இதில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
"நாங்கள் மாற்றுத் திட்டங்களையும் தயாரித்துவைத்துள்ளோம். இரட்டை நிலைப்பாட்டில் உள்ள அரசாங்க உறுப்பினர்களை வெளிக்காட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தொடர்ந்து முன்செல்ல முடியும்" என்றார்.
அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது, அரசியலமைப்பின் படி அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் ஏற்புடையது என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களான பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மற்றும் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அகற்றுவதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இலக்கு ஜனாதிபதி மற்றும் சபாநாயர்களாகும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.