நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியுமென தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்  தென்படுவதாகவும் குறிப்பிட்டார். 

முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், மாற்று அணிகளுக்கு தாவிச் செல்வதற்கு தற்போது மும்முரம் காட்டுகின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வெற்றிகொள்ளமுடியாது என்பதனால்தான், அவ்வாறு மும்முரம் காட்டுகின்றனர் என்றார். 

“மத்திய வங்கி பிணைமுறி மோசடியை ஏற்காதவர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“அத்துடன் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு, பொலிஸாரின் அசமந்த போக்குதான் காரணமென கூறப்பட்டது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களே, இவ்வாறு குற்றஞ்சாட்டினர். மேற்படி சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில், சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவே இருந்தார். ஆதலால், அந்தச் சம்பவங்களுக்கு, அவரே பொறுப்புக்கூற வேண்டும்” என்றார்.  இவ்வாறான நிலையில், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, முஸ்லிம் அமைச்சர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திகொள்ள முடியுமென குறிப்பிட்ட முஸம்மில், பணப் பொதிகளுக்காக அமைதிகாப்பதா அல்லது மக்களுக்காக செயற்படுவதா என்பதை முஸ்லிம் அமைச்சர்களே தீர்மானித்துக்கொள்ளவேண்டும் என்றார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.