மே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை!

வழமைபோன்ற மே தின மேடைகளில் அறிவிப்புக்களை வெளியிடாமல், இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் கொழும்பில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானத்தின்படி மிகமோசமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைய புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எனினும் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இரண்டரை வருடங்களாகியும் இதுவரை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.

இதுகறித்து இந்த வருடம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் இன்னமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யவோ அல்லது சர்வதேச தரத்திற்கு அமைவான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்த நிலையிலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்துடன் தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் இணைந்து இன்று நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் இம்முறை நடைபெறும் தொழிலாளர் தினமான மே தினத்தில் கோரிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
Powered by Blogger.