முதல் தடவையாக புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்!

புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாதுப் பொருள்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாகக் காணப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம்.

இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவருடைய வெசாக் வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.

அவரின் வாழ்த்து செய்தி வருமாறு:-

உலகம் தழுவிய புத்த சமயிகளை பொறுத்தளவில் புனித வெசாக் பண்டிகை அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. புத்த பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த பிறப்பு, ஞானம் அடைதல், இறப்பு ஆகிய மூன்று முக்கிய சம்பவங்களும் வெசாக் முழுமதி நாளிலேயே இடம்பெற்றன. இதை நினைவு கூருகின்ற வகையிலேயே சிங்கள பௌத்தர்களாலும் வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

எந்தவொரு சமயமும் வன்முறையை போதிக்கவே இல்லை. வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையையே அனைத்து சமயங்களும் போதிக்கின்றன.புத்த பகவானின் போதனைகளும் காருண்யத்தையே அடிப்படையாக கொண்டவை. ஆகவேதான் காருண்யத்தையும், வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையையும் நேசிக்கின்ற மனிதர்கள் அனைவரும் புனித வெசாக் நாளை கொண்டாட வேண்டியவர்களாக உள்ளனர் என்பதோடு புத்த தர்மம் போதிக்கின்ற வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை பேணி நடக்கவும், ஊக்குவிக்கவும், முன்னேற்றவும் வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

புத்த பகவானின் போதனைகள் உண்மையில் எந்த இனத்துக்கும் சொந்தமானவை அல்ல, மாறாக மனித குலம் முழுவதற்கும் சொந்தமானவை என்பதற்கும் அப்பால் பௌத்தர்களுக்கு மாத்திரம் அன்றி இந்துக்களுக்கும் வெசாக் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால் இந்துக்கள் வைகாசி விசாகம் என்றும் விசாக பண்டிகை என்றும் வெசாக் பண்டிகை நாளை கொண்டாடி வருகின்றனர். ஆகவே சிங்கள பௌத்தர்களுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான உறவு பாலமாக இப்புனித நாள் விளங்கி வருகின்றது. மேலும் இந்துக்களின் காக்கும் கடவுளான திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக புத்த பகவானை இந்துக்கள் கும்பிட்டு வருகின்றனர். மேலும் புத்த பகவானுக்கு என்று காயத்திரி மந்திரம் ஒன்றை இந்துக்கள் ஓதி பிரார்த்திக்கின்றனர் என்பதையும் நான் இவ்விடத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

எமது நாட்டில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த யுத்த வன்முறைகளால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். யுத்த வன்முறைகள் அற்ற இன்றைய அமைதி சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியாக இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே யுத்த வன்முறைகள் அற்ற அமைதி சூழல் எமது நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நின்று நிலவி நீடிக்க வேண்டும் என்று எல்லோரையும் போலவே நாமும் விரும்புகின்றோம். இந்த அமைதி சூழலுக்கு எந்தவொரு குந்தகமும் ஏற்படுத்தப்படவே கூடாது.

போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் வெசாக் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை முன்னெடுப்போம் என்கிற பூட்கையுடன் இம்முறை வெசாக் பண்டிகையை வெகுபிரமாதமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து உள்ளோம். வெசாக் கூடுகளும், அலங்கார பந்தல்களும், தான சாலைகளும் தயாராகி உள்ளன. தான சாலைகளில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த வருடம் 10000 அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருவோருக்கு இல்லை என்று சொல்லாத வகையில் இம்முறையும் அன்னம் அள்ளி அள்ளி வழங்கப்படும். மேலும் புத்த பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட பக்தி கீதங்கள் அலங்கார பந்தல்களிலும், தான சாலைகளிலும் ஒலிக்க விடப்படும். இப்பக்தி கீதங்கள் தமிழ் மாணவர்கள், இராணுவம் ஆகியோரால் இசைக்கப்பட்டவை ஆகும்.

மேலும் இம்முறை வெசாக் தினத்தை ஒட்டி விசேட சிறப்பு பரிசு ஒன்றை யாழ்ப்பாண மண்ணுக்கும், யாழ்ப்பாண மக்களுக்கும் நாம் வழங்குகின்றோம். புத்த பகவானின் புனித தாது பொருட்கள் உயரிய, மேலான வணக்கத்துக்கு உரியவை. இவை எங்கு காணப்படுகின்றனவோ, எங்கு கொண்டு செல்லப்படுகின்றனவோ அங்கெல்லாம் வனப்பும், செழிப்பும் நின்று நிலவும் என்பது உலகம் தழுவிய புத்த சமயிகளின் நம்பிக்கையும், விசுவாசமும் ஆகும். கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாது பொருட்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாக காணப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாது பொருட்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம். இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு இருக்கும். இவற்றை தரிசித்து யாழ்ப்பாண மக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று உய்ய வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.