விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்!

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலர் வலய மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உற்பத்தியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிசேனவின் பணிப்புரையின் பேரில் அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பூசனி, வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட மரக்கறி வகைகளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உலர் வலய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கவனம் செலுத்தி அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த மரக்கறி வகைகளை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் முறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த மரக்கறி வகைகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்யும் முறை குறித்தும் தனியார் துறையின் பங்களிப்பை இவற்றுக்கு பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்த மரக்கறி வகைகளை பாதுகாத்து வைப்பதற்கான புதிய முறைமைகளை பரீட்சித்து பார்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வைத்தியசாலைகள், இராணுவ தலைமையகம் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் போன்ற இடங்களுக்கு பெருமளவில் மரக்கறி வகைகளை விநியோகிக்கும் போது இந்த மரக்கறிகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் முக்கிய நகரங்களில் சில்லறை விலை குறைவடையவில்லை என்பதுடன், மரக்கறி வகைகள் அதிகமுள்ள பிரதேசங்கிளிலிருந்து நகரப் பிரதேசங்களுக்கு மரக்கறி வகைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்கி, விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பாதிப்புகளிலிருந்து அவர்களை விடுவிப்பது குறித்து அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர், சிவில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Powered by Blogger.