மண்ணுக்காக மாய்ந்தால் பெருமைப்படுவேன்.!

 திரையுலகில் எந்தவித பந்தாவும் இல்லாமல் தனக்கென்ற தனி அடையாளமாக  எளிமையை தரித்து தமிழக மக்களின் நலன்காக்க தன்னால் இயன்ற வரை ஓயாது இயங்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். 
ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ , நீட் தேர்வு எதிர்ப்பு, ஐபிஎல் எதிர்ப்பு என தமிழக மக்கள் முன்னெடுக்கும் போராட்டக்களங்களில் எல்லாம் இவரது தரிசனம் நிதர்சனம். படோடபமான

திரைப்படம், போராட்டம், பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆற்றல் உரை என பிஸியாக இருக்கும் அவரை சந்திக்க நேரம் கேட்டபோது, உடனடியாக ஒப்புக்கொண்டு சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வரவேற்றார். விடியற்காலையில் அவரது வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில்தான் அவருடனான முதல் சந்திப்பு. தன்னுடன் உடற்பயிற்சி மேற்கொள்வோரையெல்லாம் அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்த அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவருடன் அவரது இல்லத்திற்கு பயணமானோம். எதார்த்தமான வாழ்க்கை முறையோடு கூடிய அவரது இல்லம் அவரைப்பற்றி அறிய ஒரு புதிய ஆவலைத்தந்தது. நடுமுற்றத்தில் தமிழர்களின் தலைவர் பிரபாகரனின் பெரிய அளவிலான உருவப்படம் நம்மை வரவேற்றது. கண்ணில் தென்பட்ட விருதுகளும், கேடயங்களும் அவரது தமிழ் உணர்வையும், போர்க்குணத்தையும் பறைசாற்றின.

அப்படியே செய்தி.காம் இணையதளத்திற்காக பிரத்யேகமாக அவருடன்  காலை சிற்றுண்டியுடன் சிறு உரையாடலுக்குள் பயணமான போது மனம் திறந்து பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் இயக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல் ஏதும் உண்டா?

விரைவில் மக்கள் போராட்டங்களை, சமூகத்தை எதிர்நோக்கும் பாதிப்புகளை முன்வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளேன். அதற்கான கதை முழுவதுமாக எழுத்துவடிவத்தில் தயாராகிவிட்டது. படத்தின் கதைக்களம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் என்பதால் கதாநாயகனாக நானே வேடமேற்கவும் முடிவு செய்துள்ளேன்.

தமிழக அரசியல் நிலை பற்றி உங்களது கருத்து?

மக்களை பற்றி சிந்திக்காத எந்த அரசும் நல்லரசாக இருக்க முடியாது. மக்களுக்கான, நாட்டிற்கான  திட்டங்களை கொண்டு வரும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை நன்கு அறிந்து தெளித்த பின்னரே நிறைவேற்ற வேண்டும். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்பதை உணராத ஆட்சியாளர்களிடத்தில் பேசிப்பயனில்லை. அடித்தட்டு மக்கள் எந்த ரூபத்தில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்க நான் அந்தக்களத்தில் இடம்பெறுவேன்.

பிறந்தோம், உண்டோம், உறங்கினோம் என்பதல்ல வாழ்க்கை. பிறந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டும். மண்ணில் மறைவதற்குள் அதை நிரூபிக்க வேண்டும். அறம் என்ற ஆயுதம் தரித்து போராடுவேன். மாய்ந்து போக நேரிட்டாலும் மண்ணிற்கு நான் செய்த தியாகமாக கருதிக் கொள்வேன். உயிருள்ள வரை தமிழ் மண்ணை பாதுகாக்க போராடுவேன்.

அரசியல் பயணத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சிந்தனை இருக்கிறதா?

அரசியலை தாண்டிய பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். வருகிற மே.3ம் தேதி கடலூரில் மாணவ மாணவிகளை திரட்டி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறேன். நீட் தேர்வின் பாதிப்புகள் இப்போது யாருக்கும் தெரியாது. மெல்ல மெல்ல அடித்தட்டு மாணவ மாணவிகளை புறந்தள்ளும் இந்த தேர்வு வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். “நீட் வேண்டாம், நீர் வேண்டும்” என்பதே அந்த போராட்டத்தின் முழக்கமாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் தேவையற்ற நிகழ்வுகளை விலக்கி, அர்த்தமுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவே முனைப்பு காட்டி வருகிறேன்.

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பு வலுவாக இருந்ததே?

பத்திரிக்கை பணி என்பது எத்தனை நுட்பமும், அறிவும் தாங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் ஆபத்து மிகுந்தது. இதில் பெண் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பு என்பது போற்றுதவதற்குரியதே அற்றி தூற்றுவதற்கன்று. தொலைக்காட்சி விவாதத்தில் கூட எனது கருத்தை நாகரீகமாக எஸ்வி சேகரிடம் தெரிவித்தேன். அவர் அப்போதும் அநகாகரீகமாகவே பேசினார். உங்களது வீட்டுப்பிள்ளைகளை பற்றி இப்படி பேசுவீர்களா? என்பதுதான் எனது ஆவேசம்.
எஸ்.வி.சேகர் வீட்டில் பத்திரிக்கையாளர்கள் கல்லெறிந்ததாக செய்திகள் வந்தன. சொல்லெறிதலை விட கல்லெறிதல் பெரிய விஷயம் அல்ல. கடுஞ்சொற்கள் ஆறாத காயத்தையை ஏற்படுத்தும். பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தோளோடு தோள் நிற்பேன். போராட்டக்களத்திலும் இறங்க தயங்க மாட்டேன்.

சமீப காலமாக போராட்டங்களில் திரைப்பட இயக்குனர்களின் பங்கெடுப்பு அதிகமாக உள்ளதே?

படம் எடுத்தோம், பணம் சம்பாதித்தோம் என்று எல்லோருக்கும் இருக்கத்தெரியும். அதுவல்ல வாழ்க்கை. வாய்ப்பு போன இயக்குனர்கள் எல்லாம் போராட்டக்களத்திற்கு வருகிறார்கள் என்றெல்லாம் பல விமர்சனங்கள் வருகின்றன. அப்படியல்ல! நமது மண் பாதிக்கப்படும் போது மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்திக்க தெரியாதவர்கள் இயக்குனர்களாக இருக்க முடியாது. படங்களில் அதைத்தான் காட்சிகளாக வைக்கிறோம். அந்த புரிதல் இருப்பதால்தான் மண்ணுக்காக போராட இயக்குனர்கள் களமிறங்குகிறார்கள். களங்கம் கற்பிப்பவர்களுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை.

சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்து?

நல்லவர்கள் நாடாள வேண்டும். நல்லவைகளை மக்கள் பெற வேண்டும். தமிழ் மண்ணில் அறம் நிலைபெற வேண்டும். தமிழனின் போர்த்திறமும், மொழியுணர்வும் உலகறியும். தமிழனை பாதிக்கும் எந்தவொரு திட்டமும் இந்த மண்ணில் நிலைபெறாது. தீயவை அகற்றி நல்லவை புகுத்துவதே எங்கள் நோக்கம்.

-பா.ஜான்பீட்டர்

பத்திரிக்கையாளர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.