வைகோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ரம்யா!

பிரதமர் நரேந்திர‌ மோடி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த நடிகை ரம்யா வரவேற்றார். அதற்கு கர்நாடக மாநில பாஜகவினர், காவிரி விவகாரத்தில் ரம்யா தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பதாக‌ குற்றம் சாட்டியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சென்னை வந்தார். அப்போது பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் மோடி சாலைவழிப் பயணத்தைத் தவிர்த்து, ஹெலிகாப்டரில் பயணித்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”கருப்புக் கொடியைக் கண்டு பயப்படும் மோடி ஒரு கோழை. அவரைப் போன்ற கோழையான பிரதமரை இந்தியா கண்டதில்லை” என விமர்சித்தார்.
இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவரும், நடிகையுமான ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”இதை இன்னும் சத்தமாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள்” என பதிவிட்டு, தமிழகத்து ஆதரவாக‌ ‘#Goback Modi’ என எழுதி இருந்தார். இதற்கு கர்நாடக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ”காங்கிரஸைச் சேர்ந்த ரம்யா கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடகா எதிர்க்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சில தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல மைசூரு-குடகு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, ”ரம்யாவின் உண்மையான‌ முகம் வெளிப்பட்டுவிட்டது. தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளதால், உடனடியாக ரம்யாவை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கோரும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் ரம்யா கர்நாடகாவுக்கு தேவையா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.