தூத்துக்குடியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
10க்கும் மேற்பட்ட பொலிஸார் உள்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப் பகுதிக்கு மேல்தான் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான பொலிஸார் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டக்காரர்களுக்கும், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்த 10 பேரில் 3 பேரின் அடையாளம் முன்னதாக தெரிய வந்தது. ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன்  என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது.
ரயில்வே காலணி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்தார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழகப் பொலிஸார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி தடத்தியும் அவர்கள் கலைய மறுத்துவிட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த வன்முறையில் இரண்டு போலிஸ் ஜீப்களுக்கு தீ வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பொலிஸாரின் தடியடியால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புகளுக்கும் தீ வைத்தனர்.
தூத்துக்குடியில் நிலமையைக் கட்டுக்குள் வைக்க மதுரை மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் இருந்து கூடுதல் பொலிஸ் படைகள் வரவழைக்கப்பட்டன.
சுமார் 12.50 மணியளவில், போராட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்பகுதியே வன்முறைக் களமானது.
சமூக வலைத்தளங்கள் மூலமாக, போராட்டம் குறித்து தகவல் பரவி, ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் திரண்டதால், நிலமை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே பொலிஸ் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸார் எதிர்பாராத வகையில், மடத்தூர், பனிமயமாதா தேவாலயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒன்றுதிரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாலா திசைகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். இதனால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸ் திணறியது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதே போல, தமிழகத்தில் சென்னை, சேலம் உட்பட பல பகுதிகளிலும், துப்பாக்கிச் சூடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்தன.

Powered by Blogger.