2020இல் வற் வரி 2.5 வீதம் குறையும்!

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் 2020 இல் வற் வரி 2.5 சதவீதத்தால் குறைக்கப்படுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் நடைமுறைக்கு வந்து முதல் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் புதிதாக 46 ஆயிரம் வரி ஆவணக் கோவைகளை திறந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் சமரவீர மக்களின் சேவை மனப்பான்மையை பெரிதும் பாராட்டினார். அத்துடன் அடுத்த வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் புதிய சுங்கச் சட்டமொன்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.
சுங்கத் திணைக்களத்திற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 68 உதவி அத்தியட்சகர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நிதி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் சமரவீர இங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது,
சுங்கத் திணைக்களமும் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் நாட்டிற்கு வருமானத்தை பெற்றுத் தரும் இரண்டு முக்கிய திணைக்களங்களாகும். எவ்வாறாயினும் ஏழை மக்களே மறைமுகமான வழிகளில் அரசாங்கத்துக்கு வரிகளை செலுத்துகின்றனர். இச்சுமையை நாம் நீக்க வேண்டும். இதற்காக 2020 இல் வற் வரியை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை தூற்றுமளவுக்கு இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் அச்சமின்றி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளபோதும் மக்கள் இனம், சமயம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்காக தொடர்ந்தும் சண்டையிடுவதால் இன்னமும் நாடு நிலையான சமாதானத்தை எய்தவில்லை.
சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இலங்கை ஆசிய பிராந்தியத்துக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. இதன்போது பிரித்தானியாவில் வெளிவந்த ஒரு பத்திரிகையில் சிலோன் ஆசியாவின் சுவிற்சர்லாந்தாக மாற்றமடைவதற்கான சாத்தியம் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதிலுமிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 10 ஆயிரம் பரீட்சார்த்திகளில் 227 பேர் சித்தியடைந்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட விரிவான நேர்முகப் பரீட்சைக்குப் பின்னர் 68 பேர் உதவி அத்தியட்சகர் பதவிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.