ஆரண்ய காண்டம்: நீக்கப்பட்ட காட்சிகள் ரிலீஸ்!

ஆரண்ய காண்டம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகச் சாதனை படைக்காவிடினும், வெளிவந்து ஆண்டுகள் பல கடந்தாலும் சினிமா ஆர்வலர்கள் அதைக் கொண்டாடத் தவறுவதில்லை. இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தியாகராஜன் குமாரராஜா கவனிக்கத்தக்க இயக்குநராக உருவானதற்குக் காரணம் புதுமையான திரைமொழியுடன் காத்திரமான படைப்பாக ஆரண்ய காண்டம் திரைப்படத்தை உருவாக்கியதுதான்.
பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலைப் பெறாவிடினும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றது ஆரண்ய காண்டம் திரைப்படம். சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய இரு தேசிய விருதுகளைப் பெற்றது. ஆனால் தணிக்கையின்போது பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. படத்தில் 52 இடங்களில் தணிக்கைத் துறையால் வெட்டப்பட்டு இறுதியில் ‘ஏ’ சான்றிதழுடன் வெளியானது.
தொலைக்காட்சிகளில் இந்தத் திரைப்படம் பலமுறை ஒளிபரப்பப்பட்டாலும் சென்சார் வெட்டுகள் அற்ற ஒரிஜினல் வெர்ஷனைக் காண ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இதைத் தீர்க்கும் விதமாகப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். “தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் ஃபாசில் இணைந்து நடிக்கின்றனர்.
Powered by Blogger.