சம்படி ஆட்டம் போட வைத்த பாடகர்!

அன்னம் அரசு

சம்படிக் கலைஞர் கல்லூர் மாரியப்பனுடன் ஓர் உரையாடல்
திரையுலகில் நாட்டுப்புறப் பாடகர்கள் அறிமுகமாகிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பரவை முனியம்மா, புஷ்பவனம் குப்புசாமி, சந்திரமுகி சின்னப்பொண்ணு, அந்தோணி தாசன், ஆந்தகுடி இளையராஜா என நீளும் அந்தப் பட்டியலில் புதிதாகக் கல்லூர் மாரியப்பன் இடம்பிடித்திருக்கிறார்.
ஆட்டம் பாட்டம் எனக் கலைஞர்களின் கொண்டாட்டங்கள் நிறைந்தது தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கலைஞர்கள் உள்ளனர். அவை திரைப்படங்களில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்றால் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ்பெற்ற சம்படி ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘எங்கும் புகழ் துவங்க’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் அசல் கிராமத்தையும் கிராமத்துத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்துகிறது.
இந்தப் பாடல் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பாடகராக அறிமுகமாகியிருக்கும் சம்படிக் கலைஞரான கல்லூர் மாரியப்பன். எங்கும் புகழ் துவங்கப் பாடல் பாடியது குறித்தும் அந்தப் பாடல் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலின் சில பகுதிகள்...
பாடல் ஆர்வம் எப்போதிலிருந்து ஏற்பட்டது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூர் என்ற கிராமம்தான் எங்கள் ஊர். எங்க அப்பா தெருக்கூத்துக் கலைஞர். பள்ளிக்கூட வயசுல இருந்தே மூணாங்கிளாஸ், நாலாங்கிளாஸ்ல படிக்கும்போதே மைக்குல பாட்டுப் படிப்பேன். அப்பா இந்தத் தொழில் செய்ததனால நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, சிறு வயதிலிருந்தே அவர்கூட நானும் போவேன். அந்த சமயத்தில இருந்தே பாடல் மீது ஆர்வம் வந்தது.
பாடும் திறமையை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?
முதல்ல சீர்காழியோட பக்தி பாடல்கள் படிச்சு பழகினேன். அதுக்கப்புறம் நானே எழுதிப் பாட ஆரம்பிச்சேன். அதில்ல பொதுநலன்கள் இருக்கிற மாதிரி எழுதிப் பாடினேன். பீடி, சிகரெட் குடிக்கிறத பத்தி, பெண்கள் பொய்யலை (புகையிலை) போடுறத பத்தி, போதைக்கு அடிமையாகிறது என பொதுநல கருத்துகளைப் பத்தியே பாட்டு பாடிட்டிருந்தேன். 1999ன்னு நினைக்கிறேன். அப்பவே எய்ட்ஸ் பத்தி பாடல் பாடியிருக்கேன்.
அந்தோணி தாசனுடனான நட்பு எப்படி அமைந்தது?
நாங்க தொழில் செய்யுற இடத்துல கொண்டாநகர் சக்திவேல் அண்ணான்னு இருக்காங்க. நான் அந்தோணி அண்ணனை பார்க்கறதுக்கு முன்னாடி அவர் சொல்லுவாரு. “அந்தோணியெல்லாம் நீ பார்த்தின்னா ஆளையே நீ மறந்துருவ மாரி... ஓம்பாட்டுக்கு நிகர் அந்தோணி அண்ணன்தாம்ப்பா...” அப்படின்னு சொல்லுவாங்க. என்னைய விட நல்லா பாடக்கூடிய அண்ணன் அவர். கல்லூர் மாரியப்பன்னு அந்தோணியும் கேள்விப்பட்டிருக்கார். சமீபத்திலகூட வெளியூரு நிகழ்ச்சிக்குப் போகும்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.
பரியேறும் பெருமாள் பாடல் வாய்ப்பு பற்றி சொல்லுங்கள்?
பரியேறும் பெருமாள் படத்தில பாடுவதற்கு என்னை கூப்பிட சொல்லி இருக்காங்க அந்தோணி அண்ணன்கிட்ட. அந்தோணி அண்ணனோட பாட்டை விட அவரது ஆட்டம் வித்தியாசமாக இருக்கும். அவரோட ஆட்டம் மக்கள் மத்தியில ரொம்ப நல்லா எடுக்கும். நிறைய வித்தைகள் எல்லாம் காட்டுவாங்க. எங்கிட்ட பாட்டு திறமை இருக்கு. அண்ணன்கிட்ட பாட்டோட ஆட்டத் திறமையும் இருக்கு. இது இரண்டையும் இணைத்து பண்ணா நல்லா இருக்குமே என்கிற யோசனை அவங்களுக்கு.
அவர்கிட்ட என் நம்பர் இல்லாததுனால ராஜா மகேஷ்வரன்கிற கரகாட்ட கலைஞர்கிட்ட என் நம்பர் வாங்கி கூப்பிட்டு பேசுனாங்க. நானும் சென்னை வந்தேன். பாடல் எதப் பத்தின்னு விளக்கினாங்க. சேலமலைக்காரி என்று இறந்த பொண்ணு சக்தி கோயில் கேள்விபட்டிருப்பீங்க. இறந்தவங்களை கும்பிடுவாங்கல… அதைச் சொல்லி, அதுக்குள்ள கதைய வெச்சு, பாட்டு ஒண்ணு சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல எழுதச் சொன்னாங்க.
மாரி செல்வராஜுடம் பணிபுரிந்த அனுபவம்?
அவங்க சொன்ன பாடலை நானும் ஒரு பக்கம் எழுதுறேன். அந்தோணி அண்ணாவும் ஒரு பக்கம் எழுதுறாங்க. இன்னொருத்தரு எழுதிட்டு இருந்தாங்க. ஆனா என்னால எழுதி முடிக்க முடியவில்லை. அந்த நேரத்துல மாரி செல்வராஜ் சார் வர சொன்னாங்கன்னு நாங்களும் போயாச்சு. கதவ திறந்து ரூம்குள்ள போனதுமே “இவர்தான் என் கூட பாடக்கூடியவர் அண்ணே... திருநெல்வேலியில இருந்து வந்திருக்காங்க…” ன்னு என்னை அறிமுகப்படுத்துனாங்க., அதுக்கு மாரி செல்வராஜ் சார், “என்னாண்ணே நீங்க... எனக்கு கல்லூர் மாரியப்பன் அண்ணன தெரியாதா. நீங்க எங்கிட்ட அறிமுகப்படுத்திறீங்க?” அப்படீன்னாங்க. எனக்கே ஆச்சர்யமாகிடுச்சு...
என்ன சார் சொல்றீங்க. நீங்க சென்னையில இருக்கீங்க. நான் திருநெல்வேலியில ஏதோ ஒரு தெருக்கோடியில இருக்கேன். என்ன எப்படி சார் உங்களுக்குத் தெரியும். நீங்க யாரு எந்த ஊரு அப்படீங்கறேன்.
“என்ன மாரியப்பண்ணே இப்படி சொல்லிட்டீங்க. எனக்கு புளியங்குளம்தான் ஊரு. எங்க பெரியப்பா உங்க அப்பா எல்லாம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு. உங்க அப்பா ராமசாமியண்ணனை எனக்கு நல்லா தெரியும்” அப்படீன்னார்.
பிறகு, பாட்டு எழுத முடியலைங்க சார் என்றதும், “இல்லண்ணே இந்தக் கஷ்டமும் உங்களுக்கு கொடுக்கல. நானே இந்த பாட்ட எழுதிட்டேன். தெம்மாங்கு மெட்டுல. இந்த மெட்டுலதான் எழுதி இருக்கேன். இதை நீங்க தான் பாடபோறீங்க” அப்படின்னு சொல்லி பாட வச்சுட்டாங்க.
சந்தோஷ் நாராயணன் பற்றி?
“உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். உங்களைக் கொண்டுவரணும்ன்னு எண்ணம் இப்பதான் தற்செயலா வந்தது. இதுவரைக்கும் எல்லாருமே பாடி இருக்காங்க. நம்ம ஒரு வித்தியாசமா செய்வோம்கிறதுக்காகத் தான் உங்களை கூப்பிட்டேன்”னு சந்தோஷ் நாராயணன் சார் சொன்னாங்க.
தொடர்ந்து சினிமாவில் பல பாடல்களைப் பாடுவதற்கு நம் மின்னம்பலம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
Powered by Blogger.