முதல்வர் அறை முற்றுகை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, தலைமைச்
செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அறைக்கு முன்பு சென்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் தங்களை சந்திக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிராக அவர்கள் முழக்கங்களும் எழுப்பினர்.
இதையடுத்து ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியேற்றும் போது "கொலைகாரன் எடப்பாடி, கொலைகாரன் எடப்பாடி" என்று ஸ்டாலின் கோஷமிட்டுக் கொண்டே சென்றார். 
ஆனால் வெளியேற்றப்பட்ட பின்பும் விடாத ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் தலைமைச் செயலகம் முன்புள்ள ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். ஆனால் அந்த வேனை மறித்த திமுக தொண்டர்கள் வேனை நகர விடாதபடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வேனில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் மற்றும் டிஜிபி ஆகியோர் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.