விவசாய வருவாயை இரட்டிப்பாக்க வழி!

உணவு பதப்படுத்துதல் துறையை வலுப்படுத்துவதன் மூலமாகவே
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அரசின் நோக்கம் நிறைவேறும் என்று ஒன்றிய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி கருத்து தெரிவித்துள்ளார்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிர்பதன தொழில்நுட்பம் குறித்து அசோசேம் அமைப்பு டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த அரசு முயன்று வருகிறது. ஆனால், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தாமல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியாது. நுகர்வோருக்குத் தூய்மையான உணவு வழங்கவும், மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலை வழங்கவும் உணவு பதப்படுத்துதல் துறை மிக முக்கியமானதாக உள்ளது” என்று கூறினார்.
உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தி தூய்மையான உணவை நுகர்வோருக்கு வழங்குவதை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் குறிக்கோளுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ‘வேல்ர்டு ஃபுட் இந்தியா’ நிகழ்வில் இந்தியாவுக்கு சுமார் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். “குளிர்பதன ஆலைகள் அமைப்பதற்கு மொத்தம் 40 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், உத்தரப் பிரதேசத்தில் 14 குளிர்பதன ஆலைகள் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குளிர்பதன ஆலைகள் அமைப்பதற்குப் பல மாநிலங்கள் முயற்சியெடுத்து வருகின்றன” என்று அவர் பேசினார்.

No comments

Powered by Blogger.