வேல்முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக
விடுதலை செய்ய வேண்டும் என, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதித்துவிட்டு வேல்முருகனை மட்டும் கைது செய்திருப்பது அப்பட்டமான பாரபட்சமாகும். இந்தக் கைது நடவடிக்கை என்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடாது என்று கூறித்தான் வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட செய்தி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழக்கில் தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை காவல்துறை அளித்து வருகிறது.
காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி தமிழக மக்களின் நலன்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர்களை அடக்கிவிடலாம் என்ற தமிழக அரசின் கனவு வெறும் பகல்கனவாகவே இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.