இந்திய கிரிக்கெட் ஊழலுக்கு முற்றுப்புள்ளி!

கிரிக்கெட்டும் பணமும் பிரிக்க முடியாதவை. கிரிக்கெட்
பயிற்சியில் தொடங்கும் பணம் ஓய்வு பெற்று, புத்தகம் எழுதி, வர்ணனையாளராகப் பணியாற்றி, பயிற்சியாளராக ஓய்வு பெறும் வரை ஒரு கிரிக்கெட் வீரரைப் பணம் தொடர்ந்து செல்கிறது. இது கிரிக்கெட்டில் இதர வகையில் பங்கு பெறுபவர்களுக்கும் பொருந்தும். குறிப்பாகச் சொல்வதென்றால் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் அந்தந்த மாநில கிரிக்கெட் அமைப்புகள்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வகிக்கும் இந்திய ‘A' அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றுக்கு அதிக விளம்பரதாரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் வாரியமே அவற்றுக்கான செலவுகளைப் பார்த்துக்கொள்கிறது.
மேற்கூறப்பட்ட அணிகளின் போட்டிகள் நடைபெறும்போது அவற்றை நடத்துவதற்கு டெஸ்ட் போட்டிகளுக்கு 25 லட்ச ரூபாயும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு 15 லட்ச ரூபாயும் செலவு
செய்கிறது. இந்தப் பணத்தைவிட அதிகமாகும் செலவை ரசீது கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வழிமுறையில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இமாசலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் சமீபத்தில் சமர்ப்பித்த ரசீதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச போட்டிகள் அல்லாதவற்றுக்கு விதிக்கப்பட்ட பணத்துக்கு மேலாக ஒரு லட்சம் மட்டுமே தர முடியும் என்ற புதிய நிபந்தனையை விதித்திருக்கிறது. அப்படி என்ன செய்தது இமாசலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன்?
இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேவதார் கோப்பைப் போட்டியின் முடிவில் 13.5 லட்ச ரூபாய் பணத்தை அதீத செலவு ஆகிவிட்டதாகக் கேட்டது. இதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ரசீதில், 4.5 லட்ச ரூபாய் டீசல் ஜெனரேட்டருக்கும், 2 லட்ச ரூபாய் வீரர்களுக்கான உபயோகப் பொருள்களுக்கான பணமாகவும், 7 லட்ச ரூபாய் டீசல் செலவுக்கும் கணக்குக் காட்டியது. இந்த ஊழலைக் கண்டுபிடித்துவிட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கூறிய விதத்தில், ஒவ்வொரு போட்டிக்கும் விதிக்கப்பட்ட பணத்தைத் தாண்டி 1 லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என அறிவித்திருக்கிறது. இதன் மூலம், இதுவரையில் தவறான விதத்தில் செலவு செய்யப்பட்ட பணம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயன்படுத்தக் கூடியதாக மாறும் என்று கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.