உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுகிறது!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய வங்கி நேற்று அறிவித்தது.
பொருளாதாரப் போட்டித் தன்மைக்கு ஆதரவளிக்கின்ற இறைத் திரட்சி, முன்மதியுடைய நாணயக் கொள்கைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மைமிக்க செலாவணி வீதம் போன்ற ஆற்றல்வாய்ந்த பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து நிலைக்கச் செய்வதன் மூலம் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவது தவிர்க்க முடியாதது. காரணிச் சந்தைகளை வலுப்படுத்தல் முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தல், முதலீட்டு ஊக்குவிப்புக்களை அதிகரித்தல், வர்த்தக வசதிப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்தல் போன்றவற்றுக்கான அமைப்பியல் சார்ந்த சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் பலமான நாணயமாற்று புழக்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக  அறிக்கையிலேயே இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் 2.5 பில்லியன் தொகையுடைய நாட்டுக்கான பன்னாட்டு முறியொன்று வெற்றிகரமாக வழங்கப்பட்டது. இது 2.6 தடவைகள் மேலதிகமாக கோரப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரியதும் மிகவும் புகழ்பெற்றவையுமான முதலீட்டு நிதியங்கள் சிலவற்றினால் பாரிய கட்டளைகள் முன்வைக்கப்பட்டன.
நாட்டுக்கான பன்னாட்டு முறி பெறுகைகளின் கிடைப்பனவுகளுடன், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் அமெரிக்க டொலர் 9.9 பில்லியனாக அதிகரித்துள்ளன. இது வரலாற்று ரீதியாக மிகவுயர்ந்த மட்டமாகும்.
ஒரு பில்லியன் டொலர் தவணைக் கடனொன்றுக்கான முன்மொழிவிற்கான கோரிக்கைக்கு மிகவும் சாதகமான பதிலிறுத்தலொன்று காணப்படுகின்றது. இக்கடனை அதிகரிப்பதற்கும் மிகவும் செலவுமிக்க தற்போதுள்ள படுகடனை மீளச் செலுத்துவதற்கும் அதிகரிக்கின்ற பெறுகைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பரிசீலிக்கின்றது என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்க வட்டி வீதங்களை இயல்பாக்குதல் அதேபோன்று ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சமகாலத்தில் நிகழ்ந்த வளர்ச்சி காரணமாக தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில் இருந்தான வெளிப்பாய்ச்சல்களுக்கு மத்தியிலும், பங்குச் சந்தை அத்துடன் ரூபாவில் குறித்துவைக்கப்பட்ட அரசாங்க பிணையங்கள் சந்தை ஆகிய இரண்டிலும் தேறிய ஒன்றுசேர்ந்த உட்பாய்ச்சல்கள் காணப்படுகின்றன என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.