பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன்!

இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியது, ஆண்டாள்
விவகாரத்தில் இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி சென்னை வடபழனியில் இயக்குநர் வேலு பிரபாகரனின் ‘கடவுள் 2’ திரைப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா, ‘விநாயகரை இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என விமர்சித்ததோடு, “ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்குத் தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்” எனவும் பேசினார்.
இந்தப் புகார் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதியலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சம்பந்தமாக இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிராஜா மீது 295(எ) மத நம்பிக்கைகளுக்கு எதிராக மனித உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது, 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கருதி, முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 16ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பின், நான்கு மாதங்களுக்கு முன் அளித்த புகார் மீது என்னைத் துன்புறுத்தும் நோக்குடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என பாரதிராஜா கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு மே 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க புகார்தாரர் வி.ஜி.நாராயணன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய புகார்தாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு நாளை (மே 17) பதிலளிக்கும்படி வடபழனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த மனு இன்று (மே 24) மீண்டும் நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்துத் தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி ஆணையிட்டார் நீதிபதி.

No comments

Powered by Blogger.