வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுமுதல் உலருணவு நிவாரணம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுமுதல் உலருணவு நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளநீர் வடிந்துவரும் பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கப்படவிருப்பதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவு வழங்கப்படுகிறது.    இன்று (24)  உலருணவு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேசிய  சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கபண்டார இதனைத் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் சுத்தப்படுத்துவதற்கு தலா 10 ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்படவுள்ளது.

 அத்துடன், வெள்ள நீரினால் அசுத்தமடைந்த கிணறுகளை சுத்தப்படுத்துவதற்கு நீர் பம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன், நீர் வடியத் தொடங்கியதும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்று கிணறுகள் சுத்தப்படுத்தப்படும். கிணறுகளை சுத்தப்படுத்த புத்தளம் மாவட்டத்தில் 50 நீர்ப்பம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.