பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்!

அவசர அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாடசாலையை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பாடசாலைப் பாதுகாப்புத் திட்டமொன்றை தயாரிக்கும்படி கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன் முதற் கட்ட  நடவடிக்கையாக கல்வியமைச்சால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் செயற்பட வேண்டிய விதம் குறித்த ஆலோசனைப் பிரசுரங்களை நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் எதிர்பாராத வகையில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளின் போது பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்கள் அழிவதோடு பாடசாலையிலுள்ள பெறுமதியான உபகரணங்கள் ஆவணங்களும் கடந்த சில வருடங்களாக அழிந்து போயுள்ளன.
அதனைத் தடுக்க ஆலோசனைப் பிரசுரங்களின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர தற்போதைய காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளை நடத்துவதா விடுமுறை அளிப்பதா என்பதை மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவுசெய்யும் உரிமையை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளாவன,
உங்கள் பாடசாலை வெள்ளம் அல்லது மண்சரிவு அபாயமுடைய பாடசாலையானால்:
வானிலை அறிக்கைகள் மற்றும் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் குறித்து கவனமெடுக்கவும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தேவையான திட்டங்களை தயாரிக்கவும். அது தொடர்பாக பாடசாலை சமூகத்துடன் (மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய ஏனையவர்களுடன்) கலந்துரையாடவும்.
கடந்த வருட அனுபவங்களை கருத்தில் கொண்டு வெள்ளத்தால் பாதிப்படையக்கூடிய புத்தகங்கள், உபகரணங்கள், ஆவணங்களை மேல் மாடியிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ களஞ்சியப்படுத்துங்கள்.
ஆய்வுகூடம், கணனி அறை, வாசிகசாலை என்பவற்றை முடிந்தவரை மேல் மாடியில் அமைக்கவும். மேல் மாடிகள் இல்லாத பாடசாலைகளில் ஒவ்வொரு நாளும் பாடசாலை முடிந்தவுடன் ஆய்வுகூட உபகரணங்கள், கணனி, சங்கீத கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றை வெள்ளத்தால் பாதிப்படையாத பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தவும்.
மண் சரிவு அபாயம் காணப்பட்டால் அதுகுறித்த நிறுவனங்களுக்கு அறியத் தரவும்.
பாடசாலையை அண்டிய பிரதேசங்களில் வெடிப்புகள், மண் கலந்த நீர், சரிவான இடங்களில் மரங்கள் சரிந்திருக்கின்றதா உருண்டு வரக்கூடிய பாறைகள் உண்டா என ஆராயுங்கள். அதற்கு சமூகத்திடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள்.
முறிந்து விழக்கூடிய மரங்களின் கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுங்கள். 
Powered by Blogger.