யாழில் 15 பேர் திடீர்கைதுகள்!

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது.

அதன் போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி, மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை காவற்துறையினர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று இரவு 15 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யபட்டவர்களிடம் தொடர்விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.