21மீனவர்களை மீட்க வேண்டும்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் 21தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீன் பிடித் தொழிலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல் ஏஜென்சி மூலம் ஈரான் நாட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு தனியார் விசைப்படகு வைத்திருக்கும் ஒருவர் மூலம் வேலை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீனவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள், அவர்களின் வேலைக்குரிய சம்பளத்தை கொடுக்காமல், மீனவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுத்துள்ளனர். இந்த நிலையில் ஈரானில் தவித்து வரும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த சூழ்நிலையில் ஈரானில் தவிக்கும் 21தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 21) கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், "ஈரானில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிக்கித் தவிப்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவர்களுக்கு அங்கு ஒப்பந்தப்படி வேலை கொடுக்கப்படாத நிலையில், இந்தியாவிற்கு திரும்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 21மீனவர்களை ஈரானைச் சேர்ந்த முகமது சாலா மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு சொந்தமான மூன்று படகுகளில் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக மீன்பிடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 8பேர் கன்னியாகுமரியையும், 7பேர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களும் ஆவர். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு பேரும் அடங்குவர்.
ஆனால் சமீப காலத்தில் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் செய்த வேலைக்குத் தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதனால் மீனவர்கள் தங்களின் செலவுகளை கவனித்துக் கொள்ள முடியாமலும், தங்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு திரும்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள், அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். மேலும் அவர்களை தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டதால் உணவு, உடை, இருப்பிட வசதிகள் இல்லாமல் ஈரான் தெருக்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஈரானிலுள்ள இந்திய தூதரகத்துக்கு தாங்கள் உடனடியாக உத்தரவிட்டு, அங்கு சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை இந்தியா கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அவர்களின் ஊதியத்தைத் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் அச்சம் கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.