அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7000 இந்தியர்கள்!

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு இந்திய மக்கள் 7000 பேர் விண்ணப்பித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


உள்நாட்டுப் போர், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் தங்களுடைய நாடுகளை விட்டு, இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், தங்களது சொந்த நாட்டை விட்டு, வெளிநாடுகளில் அடைக்கலம் கேட்பவர்களின் விவரங்களை ஐநா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் கடந்த ஆண்டு(2017) சுமார் 6.85 கோடி பேர் தங்களது சொந்த நாடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காங்கோ, தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம்பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இதேபோன்று உலகில் உள்ள 168 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எல் சால்வடார் நாட்டிலிருந்து 49,500 பேர் விண்ணப்பித்து முதலிடத்தில் உள்ளனர்.

மேலும் வெனிசுலாவில் இருந்து 29,000 பேரும், மெக்சிகோவில் இருந்து 26,000 பேர் மற்றும் சீனாவில் இருந்து 17,400 பேர் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து 7,000 பேர் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி மொத்தம் 1,97,146 அகதிகள் உள்ளனர். அவர்களில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள 10,519 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 40,391 பேர் என்று ஐநா சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்தது, 1,24,900 மக்கள் 80 நாடுகளுக்குச் செல்ல தயாராக உள்ளதால், அடைக்கலம் கோருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.