கவுதமாலா எரிமலை வெடிப்பு: 72 பேர் பலி!

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 முதல் 75 ஆக உயர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதில் பெரும்பாலான வீடுகளை எரிமலைக் குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் அதில் சிக்கிக்கொண்டனர். இந்த சாம்பல் புகை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பரவியது. இதையடுத்து, கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசியப் பேரழிவு நிறுவனம் CONRED, அளித்த தகவலின்படி, 192 மக்கள் காணாமல் போயினர். இதில் 72 முதல் 75 பேர் வரை உயிரிழந்திருக்கலாம். அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது.
இந்நிலையில் நேற்றும் எரிமலை வெடித்து சாம்பல் புகைகளைக் கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருப்பதால், பணி மெதுவாகவே நடைபெற்றுவருகிறது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடித்துவிடுவோம்; ஆனால் எத்தனை பேர் மாயமாகியுள்ளனர் என்பது தெரியாது; அதனால், எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்வோம் என பேரழிவு நிவாரண நிறுவனத்தின் தலைவர் செர்ஜியோ கபானஸ் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.