யேர்மனியத் தமிழாலயங்கள் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் பங்கேற்ப்பு!

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 02.06.2018 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.

அந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 5110 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 60 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 420 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள். 60 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழிவளம்) எதிர்வரும் 09.06.2018 சனிக்கிழமை மற்றும் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களும் தமிழாலயங்களின் நடைபெறவுள்ளது.

தேர்வெழுதிய 5110 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.

யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 250 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2019 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 29 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.