கிளிநொச்சி வைத்தியசாலை நல்லாச்சியிலும் புறக்கணிப்பு!

கிளிநொச்சி பொது மாவட்ட வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தச்சுத்திகரிப்பு மற்றும் சிகிச்சைப்பிரிவு என்பன இல்லாமையினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

கிளிநொச்சியுடன் அயல் பிரதேசங்களான மல்லாவி, வவுனிக்குளம், விசுவமடு, உள்ளிட்ட பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் இரண்டு இலட்சம் வரையான மக்களுக்கு மருத்துவத் தேவையை வழங்குகின்ற ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது மாவட்ட வைத்தியசாலை காணப்படுகின்றது.

எனினும், இருக்கவேண்டிய சிகிச்சைப்பிரிவுகள் பல இது வரை இங்கு ஆரம்பிக்கப்பட வில்லை.

இதனால், வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு அதிக பணம் செலவழித்து சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தின் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு வைத்தியசாலை, மற்றும் செட்டிகுளம ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தச்சுத்திகரிப்பு மற்றும் சிகிச்சைப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அதிக சனத்தொகை கொண்ட மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை இந்த இரத்த சுத்திகரிப்பு, மற்றும் சிகிச்சைப்பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவில்லை.

இதனால், மாகாண அரசுகளினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.