கார் விற்பனையில் மாருதி ஆதிக்கம்!

மே மாதத்துக்கான பயணிகள் வாகன விற்பனையில், அதிகம் விற்பனையான 10 மாடல்களின் பட்டியலில் மாருதி சுஸூகியின் ஏழு கார்கள் இடம்பிடித்துள்ளன.


இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதத்துக்கான கார் விற்பனை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மே மாதத்தில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ மாடலில் மொத்தம் 21,890 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2017ஆம் ஆண்டின் மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 23,618 ஆக இருந்தது. மாருதி சுஸூகியின் டிசையர் மாடலில் 19,735 கார்களும், பலெனோ மாடலில் 19,398 கார்களும் விற்பனையாகிப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. சென்ற ஆண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்விஃப்ட் மாடல் இந்த ஆண்டில் 19,208 கார்கள் விற்பனையாகி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

மாருதி சுஸூகியின் வேகன் - ஆர் (15,974 கார்கள்) மற்றும் விடரா பிரேஸா (15,629 கார்கள்) பட்டியலில் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா மாடல் (11,004 கார்கள்) ஏழாவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டின் மே மாதத்தில் மொத்தம் 8,377 கிரேட்டா கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஹூண்டாய் கிராண்ட் ஐ-10 (10,939 கார்கள்) எட்டாவது இடத்திலும், ஹூண்டாய் எலைட் ஐ-20 (10,664 கார்கள்) ஒன்பதாவது இடத்திலும், மாருதி சுஸூகி செலரியோ (10,160 கார்கள்) பத்தாவது இடத்திலும் இருக்கின்றன.
Powered by Blogger.